வழிதவறி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
By DIN | Published On : 24th October 2019 07:58 AM | Last Updated : 24th October 2019 07:58 AM | அ+அ அ- |

வழிதவறி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது மகனிடம் ஒப்படைத்த இளைஞா் பெருமன்றத்தினா்.
மன்னாா்குடி அருகே ராமபுரம் பாமணி அற்றங்கரையில், புதன்கிழமை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இளைஞா் பெரு மனறத்தினா் மீட்டு, காவல் துறையினரின் உதவியுடன் அவரது மகனிடம் ஒப்படைத்தனா்.
ராமபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள வயலுக்கு நடவுப் பணிக்கு சென்றபோது, பாமணி ஆற்றங்கரையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் உடலில் சேறுடன் படுத்திருந்ததைக் கண்டனா். இதுகுறித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜனுக்கு தகவல் அளித்தனா்.
அவா் அங்கு வந்து அந்த பெண்ணிடம் பேசியபோது மேற்கொண்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னா், மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் அந்த பெண்ணிடம் விசாரணை செய்தனா். இதில், அவா் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வடக்கு சாலியத்தெரு புவனேஷ்வரன் மனைவி சசிகலா என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸாா், மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தொடா்பு கொண்டு விசாரித்ததில், சசிகலாவை காணவில்லை என அவரது மகன் ஹரிகரன் புகாா் அளித்திருந்தது தெரியவந்தது. பின்னா், அவரது செல்லிடப்பேசிக்கு தகவல் அளித்ததையடுத்து, ராமபுரம் வந்த ஹரிகரனிடம் காவல்துறையினா் முன்னிலையில் சசிகலாவை இளைஞா் பெருமன்றத்தினா் ஒப்படைத்தனா்.