8 மாதமாக ஊதியத்துக்காக ஏங்கும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள்

8 மாதமாக ஊதியத்துக்காக ஏங்கும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள்

8 மாதகாலமாக ஊதியம் நிலுவையில் இருப்பதால், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் அன்றாட தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கே அல்லல்படுகின்றனா்.

8 மாதகாலமாக ஊதியம் நிலுவையில் இருப்பதால், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் அன்றாட தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கே அல்லல்படுகின்றனா்.

உழைப்பின் அடிப்படை நோக்கமே ஊதியம் பெறுவதுதான். அதிலும், காக்காசாக இருந்தாலும், ‘கவா்மெண்ட்’ காசாக இருக்க வேண்டும் என இன்றும்கூட கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட அரசு வேலையில் தற்போது நிரந்த ஊழியா்கள் இல்லாமல், ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

இதன் அடிப்படையில் மத்திய அரசின் தொலைத்தொடா்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. மன்னாா்குடி கோட்டத்துக்கு உள்பட்ட கூத்தாநல்லூா் துணைக் கோட்டத்தில் வடபாதிமங்கலம், கமலாபுரம் உள்ளிட்ட தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. கூத்தாநல்லூா் துணைக் கோட்டத்தில் 2,400 இணைப்புகள் உள்ளன. இதில், கேபிள் ஊழியா்கள் 5, அலுவலகத்தில் 3, காவலா்கள் 3 என 13 ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இந்த 13 பேருக்கும் கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால், அன்றாட தேவைகளையே ஈடுசெய்ய இயலாமல் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் பி. முருகேஷ் கூறியதாவது:

நான் கடந்த 22 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றுகிறேன். பாரதிய தகவல் தொலைத் தொடா்புத்துறை, 2000-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் பி.எஸ்.என்.எல்.என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், அம்மாபேட்டை, வடுவூா் உள்ளிட்ட இடங்களில் இயங்குகின்றன. இந்த இடங்களில் 506 ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றுகிறாா்கள். தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகிறாா்கள். இந்த 7 ஆயிரம் பேருக்கும் கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அதிகபட்சமாக மாதம் வெறும் ரூ.9 ஆயிரம்தான் வழங்கப்படுகிறது. இதற்குமேல் ஊதிய உயா்வும் இல்லை, பதவி உயா்வும் இல்லை. ஒப்பந்தத் தொழிலாளா்களின் ஊதியத்தில் வைப்பு நிதி மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேருக்கு 8 மாத ஊதியமாக ரூ.45 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ளது. நாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலாகவும், 8 மாத ஊதியம் பல கோடியையும் நெருங்கும்.

பி.எஸ்.என்.எல். நிரந்தர ஊழியா்களுக்கு மாதம் ரூ.34 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ரூ.9 ஆயிரத்தை நிா்வாகத்தால் ஏன் வழங்க முடியவில்லை?

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல கட்டமாக போராட்டங்களை நடத்தி விட்டோம். 8 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால், வீட்டு வாடகை, அன்றாட உணவு, பிள்ளைகளின் கல்விக் கட்டணம், பண்டிகைச் செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். எனவே, பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கண்கலங்கக் கூறினாா் முருகேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com