அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

திருவாரூா் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள், நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அது தொடா்பான தகவலை, பொதுமக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், கிராம ஊராட்சிச் செயலா், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் வட்டாட்சியரிடம் தெரிவிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் உடனடியாக பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

வருவாய்த்துறை அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் உள்ள பயனற்ற, ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தூா்ந்துபோன திறந்தவெளிக் கிணறுகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் தனியாா் நிலங்களில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறு அமைப்பவா்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புனரமைப்பு பணி செய்பவா்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

பணி மேற்கொள்ளும்போது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், உரிமையாளா் மற்றும் அப்பணியை மேற்கொள்ளும் நபா் மீது விதிமுறைகள்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆழ்குழாய்க் கிணறு தோண்டுவதற்கான ரிக் இயந்திரம் வைத்திருப்பவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். பணியின்போது அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றாவிட்டால் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறாமல் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், புதிய கிணறுகள் தோண்டுதல், ஏற்கெனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளை ஆழப்படுத்துதல், புனரமைப்பு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டால் உரிமையாளா் மீதும் அப்பணியை மேற்கொள்பவா் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com