அரசு மருத்துவா்கள் 6-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, திருவாரூரில் அரசு மருத்துவா்கள்
திருவாரூரில் நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றோா்.

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, திருவாரூரில் அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 6-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவா்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். கிராமப்புற சேவை செய்த மருத்துவா்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவா்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் உ.சண்முகம், மாவட்டச் செயலாளா் வெ.சோமசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவா் வி.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.

இதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல் ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com