தலையாய பிரச்னையாக மாறிய தலைக்கவசம்..!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமன்றி, பின்னால் அமர்ந்து இருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்கிற
தலையாய பிரச்னையாக மாறிய தலைக்கவசம்..!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமன்றி, பின்னால் அமர்ந்து இருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்கிற விதிமுறை இருசக்கர வாகனம் வைத்திருப்போரிடையே தலையாய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மத்திய அரசு போக்குவரத்து சட்ட விதிகளை கடுமையாக்கி, விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராத தொகையை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஏற்கெனவே, தமிழகத்தில் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்கிற நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 
 இந்த ஆண்டு முதல் தமிழக அரசு நெகிழிப் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க கடுமையான முயற்சி மேற்கொண்டது. இதன் காரணமாக தற்போது அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது கையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப்பையுடன் செல்வதைப் பார்க்க முடிகிறது. 
 அதே வரிசையில், தொடர்ந்து ஒரு பழக்கத்தில் இருந்து வந்த நாம் அதனை மாற்றி சரியானவற்றை கடைப்பிடிப்பதற்கு சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அந்த சங்கடங்களை, செளகரியங்களாக மாற்றி நாம் சட்டத்தின் வழியில் நடைபோட வேண்டும். 
தலைக்கவசம் அணிவது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், ஏதேனும் ஒரு விபத்து நடைபெற்றால் தலைக்கவசம் அணிந்து சென்றவர் தலையில் அடிபடாமல் உடலின் மற்ற பாகங்களில் அடிபட்டு  உயிர் பிழைத்ததை பல நேரங்களில் நாம் கண்டிருக்கிறோம். எனவே தலைக்கவசம் அணிவது என்பது தவிர்க்க முடியாத, நிதர்சனமான, பாதுகாப்புக் கவசம் என்கிற விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. 
இன்றைக்கு காவல்துறையினர் ஒவ்வொரு நகரத்தின் தெருமுனைகளிலும் நின்று சோதனை செய்து போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். நாம் சாலை விதிகளைக் கடைப்பிடித்து முறையாக செல்லும்போது நம்மை யாரும் தண்டிக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்றைக்கு தலைக்கவச வியாபாரம் என்பது தெருமுனை வியாபாரமாக மாறிவிட்டது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது தலையாய கடமை எனக் கருதி, தலைக்கவசத்தை அணிய முன்வர வேண்டும். 
அதே வேளையில், சாலை போக்குவரத்து விதிகள் இன்னமும் கடுமையாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். வாகனங்களின் முகப்பு விளக்குகளில் மிகவும் சக்திவாய்ந்த பல்புகளை பொருத்துவதால், எதிரே வருபவருடைய கண்கள் கூசுகின்ற அளவுக்கு அவை ஒளியை உமிழ்கின்றன.
இதனால் எதிரே வருகின்ற வாகன ஓட்டிகளின் பார்வை மறைக்கப்பட்டு, அசம்பாவித செயலுக்கு வித்திடுகிறது. இதுவும் போக்குவரத்து விதிகளுக்கு முரணான ஒரு நடைமுறை. இதனை நீதிமன்றமும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு விதிகளுக்கு உட்பட்டு முகப்புவிளக்குகள் அமைய வேண்டும் என்கிற விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதேபோல், பல வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலி எழுப்பான்கள் பல்வேறு விதமான ஒலியை எழுப்புவதை இன்றைக்கு உணர முடிகிறது. குழந்தை அழுவது போலவும், ஏதோ விபத்து நடந்துவிட்டது போலவும், ஆம்புலன்ஸ் வாகனம் போலவும் இன்றைக்கு வாகன ஒலிப்பான்கள் ஒலிக்கின்றன. இதுவும் போக்குவரத்து விதிமீறலில் அடங்கும். 
ஒவ்வொரு வாகனமும், எந்த டெசிபல் அளவு ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பொருத்திட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அதையும் மீறி மிக அதிக ஒலி எழுப்புகின்ற பல்வேறு விதமான ஓலி எழுப்பான்கள் பொருத்தப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பிரதான
எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com