ஒழுங்கே இல்லாத "ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்'..! விவசாயிகளின் வருகையும் குறைகிறது

திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை கொண்டு
ஒழுங்கே இல்லாத "ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்'..! விவசாயிகளின் வருகையும் குறைகிறது

திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை கொண்டு செல்ல ஒழுங்கான பாதையே இல்லை. இதனால் இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் பயன்பாடற்ற நிலையில் காணப்படுகிறது.
திருவாரூரில் நாகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்ற இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகள் ஓய்வூக்கூடம், ஏல அரங்கு, உலர்களம், கிடங்கு உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இது, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும் 
வகையில் இந்த விற்பனைக்கூடம் 
ஏற்படுத்தப்பட்டது.
பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, துவரை, மாம்பழம் உள்ளிட்ட விளைபொருள்கள் விற்பனை நடைபெற்றாலும், திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி மட்டுமே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது, பெரும்பாலும் பயன்பாடற்ற நிலையிலேயே காணப்படுகிறது. விவசாயிகளின் ஓய்வூக்கூடம், ஏல அரங்கு உள்ளிட்ட கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாததால், மிகவும் சேதமடைந்து, பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.
அதேநேரம், ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய கிட்டங்கி கட்டடம், கிடங்கு, கணினி கூடங்குகளும் கட்டப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டன. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் மட்டுமே தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது நெல் உள்ளிட்ட பொருள்களும் மறைமுக ஏலத்தில் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், பருத்தியாக இருந்தாலும், நெல்லாக இருந்தாலும் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு மூட்டைகளை வாகனங்களில் கொண்டு வருவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு முறையான பாதை அமைப்பு இல்லாததே. அத்துடன், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாதது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வருகை தரும் விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் விவசாய இயக்குநர் சி. செல்வக்குமார் தெரிவித்தது:
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பழைய கட்டடங்களே நிறைய உள்ளன. இவற்றை புனரமைத்தாலே, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக, மீண்டும் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளனவே தவிர, இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை. கழிவறை, குடிநீர் வசதிகளும் முறையாக இல்லை. இவற்றுக்காக பழைய பேருந்து நிலையத்துக்கோ, பொது இடத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. 
விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை கொண்டு வருவதற்கான முறையான பாதை அமைப்பு இல்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான பாதை அமைப்பை சரி செய்தால், விவசாயிகள் அதிகமாக வருவர். அத்துடன் விற்பனைக் கூடத்தில், நிறைய இடங்கள் தாராளமாக உள்ளன. அவற்றில் கூடுதலாக சிறிய அளவில் கடைகளை உருவாக்கி, சந்தை அமைப்பை ஏற்படுத்தலாம். இதில் விவசாயப் பொருள்களை விற்பனைக்கு வைத்தால், இங்கு வரும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயத்துக்குத் தேவையான விளைபொருள்களை வாங்குவதற்காக வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். வருவாயும் பெருக 
வாய்ப்புள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வடுவூர், பூந்தோட்டம், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல் என 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், மாவட்டத் தலைநகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறையான பாதை அமைப்பு இல்லாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வருகையையும் குறைத்து வருகிறது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், முறையான பாதை அமைப்பை ஏற்படுத்த வேண்டும், கடைகள் கட்டி சந்தை அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே  விவசாயிகளின் எதிர்பார்ப்பு.  

அடைபட்ட பாதை....
சில ஆண்டுகளுக்கு முன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கிழக்கு பகுதியில், மில் தெரு வழியாக, பாதை இருந்துள்ளது. இந்த பாதை வழியாகவே விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதேநேரம், இந்த பாதையை, பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன், இரவு நேரங்களில் சிலர் இந்த பாதையை பயன்படுத்தி, உள்ளே வந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பாதை அடைக்கப்பட்டது. இந்த பாதையின் தெரு பகுதியில் தற்போது சிறிய கோயில் கட்டப்பட்டு விட்டது. இதனால், இந்த பாதையை மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்தாலும், கோயில் இருப்பதால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விரைவில் தீர்வு வரும்...
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு முறையான பாதை இல்லாதது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் விற்பனைக் கூட 
அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் பாதை...
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு மேற்குப் புறத்தில் அமைந்துள்ள கால்வாயின் மேல் பாதை அமைத்து, நாகை தேசிய நெடுஞ்சாலையில் இணைக்க வேண்டும். அதன்மூலம் வாகனங்கள் எவ்வித பயமின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வர முடியும். அத்துடன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது, அனைத்து மக்களும் எளிதாக பார்க்கும் வகையிலும் அமையும் என்பது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com