ரிசர்வ் வங்கியிலிருந்து பெறப்பட்ட உபரி நிதியை மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? இரா. முத்தரசன் கேள்வி

ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு என்ன செய்ய போகிறது

ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் மத்திய அரசு அத்துமீறி தலையிடுகிறது. கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பறித்துக் கொண்டது. இந்தப் பணம் எதற்காக செலவிடப்படவுள்ளது என்பதை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க இந்தப் பணம் பயன்படுத்தப்படுமா? இல்லையெனில், பெருநிறுவனங்களுக்கு சலுகை வழங்கப் பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு தெளிவான பதிலைத் தெரிவிக்க வேண்டும்.
கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதில் மத்திய அரசு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.  ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் பெறப்பட்ட முதலீடுகள் என்ன ஆனது என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
 உலகத்திலேயே இஸ்ரேலில்தான் நீர் சிக்கனத்தை, நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றனர் என்று முதல்வர் தெரிவிக்கிறார். அவர் இஸ்ரேல் சென்று வரட்டும். முன்னாள் முதல்வர் காமராஜர் கையாண்ட நீர் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தினாலே நீர் மேலாண்மையில் முன்னேற்றம் காண முடியும். தூர்வாரும் பணி என்ற பெயரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிதியைப் பங்கிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனால், இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. ஆந்திர மாநில அரசு தங்கள் எல்லைக்குள் பாலாற்றில் 33 கி.மீ. தூரத்தில் 22 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கொள்ளிடத்திலும் தடுப்பணை இல்லை. காவிரியிலும் தடுப்பணை இல்லை. எந்த இடத்திலும் தடுப்பணை இல்லாத காரணத்தால், தண்ணீர் முழுவதும் கடலில் கலந்து வீணாகிறது.
டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்துப் பணிகள், தூர்வாரும் பணிகள், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, செலவிடப்பட்ட நிதி, ஒப்பந்ததாரர்கள் பற்றிய விவரம் என ஒட்டுமொத்த தகவல்களையும் முதல்வர் விவரிக்க வேண்டும்.
மேலும், அரசு முறை பயணமாக முதல்வர் வெளிநாடு சென்றார். எனவே அதுபற்றிய விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அறிக்கை வெளியிடாமல் மூடி மறைத்ததைப் போல் இதையும் மூடி மறைக்கக் கூடாது என்றார் முத்தரசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com