போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருத்துறைப்பூண்டி!

மக்கள்தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வாகனங்கள், நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள், போக்குவரத்தை
போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருத்துறைப்பூண்டி!

மக்கள்தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வாகனங்கள், நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய காவலர்கள் இல்லாமை போன்ற காரணங்களால் திருத்துறைப்பூண்டி நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகராட்சிகளில் ஒன்றான திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவனந்தபுரம், மார்த்தாண்டம், கலியக்காவிளை, பெங்களூரு, சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகளும், 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இது மட்டுமன்றி வேதாரண்யம் பகுதியில் இருந்து சவுக்கு, உப்பு, சிலிகேட், ஆற்று மணல் ஏற்றி வரும் சரக்கு லாரிகள் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வந்துதான் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் தென் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் நாகை மாவட்டத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்கு வருவோர் திருத்துறைப்பூண்டியைக் கடந்துதான் செல்ல வேண்டும். 
 சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால், 170 கிமீ வரை குறைவு என்பதால், இந்த சாலையில் நாள்தோறும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. மேலும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி மாணவர்களை ஏற்றி, இறக்குவதும், தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி பயணிகளை ஏற்றுவதும் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு மற்றொரு காரணியாகத் திகழ்கிறது.
பட்டுக்கோட்டை- வேதாரண்யம் சாலை வழியாக திருத்துறைப்பூண்டி நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் முள்ளி ஆற்றுப் பாலத்தில் இருந்து வரதராஜ பெருமாள் கோயில் வரை குறுகிய சாலையில் பழக்கடை, காய்கறி கடைகளில் சரக்குகளை ஏற்றி இறக்குகின்றன. ஒருவழிப் பாதையில் வாகனங்கள் முறையாக இயக்கப்படாததால், திருத்துறைப்பூண்டியில் காலை 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. திருத்துறைப்பூண்டி நகருக்குள் பட்டுக்கோட்டை- வேதாரண்யம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அரசு மருத்துவமனை, வேதாரண்யம் சாலை ரவுண்டானா கிழக்கு கடற்கரை புறவழிப்பிரிவு சாலை, நாகை சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் நாகை சாலை நகைக்கடை வரதராஜ பெருமாள் ஆலய ஆற்றுப்பாலம் வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், ஒரு வழிப்பாதை என்பது பெரும்பாலும் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை.
இது தவிர போக்குவரத்தைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் பிரிவு முறையாக செயல்படுவதும் கேள்விக்குறியே. பொதுவாக, ஒரு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 7 போலீஸார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், திருத்துறைப்பூண்டி போக்குவரத்து காவல்துறையைப் பொருத்தவரை தமிழகத்தில் எங்கு திருவிழா நடைபெற்றாலும், இங்குள்ள போக்குவரத்து காவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதனால், சமயங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருக்கிறார்களா என்ற ஐயம் கூட எழும்.
திருத்துறைப்பூண்டியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க போதிய போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டுமென்றும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், வேதாரண்யம், நாகை, திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை சாலைகளை இணைக்கும் ரிங் ரோடு புறவழிச் சாலை அமைத்தால், திருத்துறைப்பூண்டி நகரின் போக்குவரத்து சிக்கலை எளிதில் தீர்க்க வழிவகை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com