நீடாமங்கலம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?

 நீடாமங்கலம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
நீடாமங்கலம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?


 நீடாமங்கலம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். நீடாமங்கலத்தில் தாலுக்கா அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட வசதிகளோடு செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நீடாமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது. 24 மணி நேர மருத்துவமனை என்ற பெயரும் இதற்கு உண்டு.
இந்த மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் இரவு, பகலாக நோயாளிகளைக் கவனிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் போதுமான மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் இதய நோய், விஷக்கடி, விபத்து உள்ளிட்ட முக்கியமான பாதிப்புகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சையளிப்பதில்லை.
 பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மன்னார்குடி அல்லது தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் நோயாளிகள் தப்பித்தவறி நீடாமங்கலம் மருத்துவமனைக்கு வந்தாலும், அவர்களுக்கு போதுமான சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் வரும் நோயாளிகளின் நிலை சிக்கல்தான். 
நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில், பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்கு பூட்டியே கிடக்கிறது. இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் பொதுவுடைமை இயக்கங்கள் போராட்டம் நடத்தியதால், மாவட்ட அளவிலான சுகாதரத்துறை அதிகாரி பார்வையிட்டு, கட்டமைப்பை ஓரளவுக்கு சரி செய்தார். எனினும், நாள்கள் செல்ல செல்ல மருத்துவமனையின் நிலைமை பின்னடைவைச் சந்தித்தது.
போதுமான ஊழியர்கள் பணியில் இருப்பதில்லை. அடிப்படை வசதிகளிலும் குறைபாடு நிலவுகிறது. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து முறைப்படுத்திட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும். மேலும், தனியாக கிளினிக் நடத்தும் ஆர்வத்தில், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களால் சரிவர பணியாற்ற முடியவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினர்  வி.எஸ்.கலியபெருமாள் கூறியதாவது: நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுப்பதாலேயே மருத்துவப் பணி சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்லிவிட முடியாது. இங்கு மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் அல்லது நியமிக்கப்பட்டவர்கள் சரிவர பணிக்கு வர வேண்டும். 24 மணிநேரமும் மருத்துவமனை இயங்க வேண்டும். உள்நோயாளிகளை சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும். இசிஜி எடுக்க வேண்டும். இங்கு நாய்க்கடிக்கு மருந்து இல்லை. நீடாமங்கலம் ஏழை, எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் நிறைந்துள்ள பகுதி. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இயலாத ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை, அந்த மக்களுக்காக சரியான சிகிச்சையை அளிக்க வேண்டும். 
இரவு நேரங்களில் மருத்துவர்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சையளிக்க முன்வர வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் சேவை மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மருத்துவமனையின் சுற்றுப்புற சுகாதாரத்தை முறையாக பேண வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com