கலகலத்துபோன கலையரங்கம்:  மன்னார்குடி பெருமைக்கு ஓர் கலக்கம் 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடித் திடலில் கலையரங்கம் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், இதுநாள் வரை ஒரு
கலகலத்துபோன கலையரங்கம்:  மன்னார்குடி பெருமைக்கு ஓர் கலக்கம் 



மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடித் திடலில் கலையரங்கம் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், இதுநாள் வரை ஒரு நிகழ்ச்சி கூட நடைபெறாமல், கலையரங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து, அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
  மன்னார்குடியில் ஒருகாலத்தில் பத்தாயிரம் பேர் வரை அமர்ந்து விழாவைக் கண்டுகளிக்கும் வகையில், தேரடித் திடல் நகராட்சி கலையரங்கம் விளங்கியது. இந்த மேடையில் பேசாத தேசிய, மாநிலத் தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசியல், ஆன்மிகம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சிய ஜாம்பாவன்களின் வாழ்க்கை வரலாற்று ஏடுகளில் கண்டிப்பாக தேரடித்திடல் இடம் பெற்றிருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த கலையரங்கக் கட்டடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் கூடிய விசாலமான கலையரங்கம் அமைக்க 2004-ஆம் ஆண்டில் அப்போதைய நகர்மன்றத்  தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த பழ.மணி தலைமையில், நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது.
 அதன்படி, கடந்த 2005 -ஆம் ஆண்டு பழைய கலையரங்கக் கட்டடம் இடிக்கப்பட்டு, அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் பெறப்பட்டு புதிய கட்டடப் பணி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2006 -ஆம் ஆண்டு நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த த.கார்த்திகா பொறுப்பேற்றார். அதன்பின்னர், சில மாதங்களிலேயே ஆர்.காமராஜின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததால், கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்பட்டது. 
இதற்கு மத்தியில், 2011 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த டி.சுதா அன்புச்செல்வன் நகர்மன்ற தலைவராக பதவியேற்ற பின், நகராட்சி கலையரங்க கட்டுமானப் பணிக்கு புத்துயிரூட்டுமாறு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சரின் பரிந்துரையின்பேரில், அப்போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆ.இளவரசனின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெற்று கலையரங்கம் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தக் கலையரங்கம் 22 அடி அகலம், 31 அடி நீளம், குளியலறை, கழிவறை, ஓய்வறை, குடிநீர் மற்றும் மின்சார வசதி, சாய்வு தள வசதி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதை 2014-ஆம் ஆண்டு அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.எனினும், அதன் மேடையின் உயரம் குறைவாக இருப்பதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால், அதன் அருகிலேயே தனி மேடை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டமும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற பொதுக் கூட்டம் கூட தனி மேடையில்தான் நடைபெற்றது.
 இதுகுறித்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மன்னார்குடி கிளைச் செயலர் செ. செல்வகுமார் கூறியது:
கலையரங்கத்தின் மேடை, தரைதளத்திலிருந்து குறைந்தது ஐந்து அடி உயரமாவது இருக்க வேண்டும். இதுவோ வெறும் இரண்டு அடிதான் உள்ளது. இதனால், எதிரே நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு மேடையில் இருப்போரை பார்க்க இயலாது. மேலும், தேரடித் திடல் முழுவதும் வாடகை சுமை வேன், லாரி நிறுத்தும் இடமாக மாறிவிட்டதால் திடல் குண்டும், குழியுமாக மாறி, மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், கலை நிகழ்ச்சி நடக்கும் முன் திடலை சுத்தம் செய்து பராமரிப்பதற்கே பெரும் தொகையை செலவிட நேரிடுகிறது. நகராட்சி கலையரங்கம் அமைக்கப்பட்டபோது எங்களைப் பேன்ற  இலக்கிய அமைப்பினர், குறைந்த செலவில் மக்களுக்கு  நிறைவான கலை, இலக்கிய சேவைகளை அளிக்கலாம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது என்றார் அவர். 
மன்னார்குடி புத்தக சந்தை ஒருங்கிணைப்பாளர் இரா.யேசுதாஸ் கூறியது: அண்மையில் மன்னார்குடியில் பத்து நாள்கள் புத்தக சந்தை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் கலை, இலக்கியத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. புத்தக சந்தை நடைபெற்ற இடத்தின் அருகிலேயே தேரடித் திடல் இருந்தும், கலையரங்கின் மேடை அமைப்பு சரியில்லாததால், விழா நடைபெற்ற இடத்திலேயே மேடை அமைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியாகிவிட்டது.30 ஆண்டுகளுக்கு முன் தரையில் அமர்ந்துதான் மாநாடு, கூட்டம், இலக்கிய, நாடகம், கூத்து நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்த்தனர். அதற்கு ஏற்ற வகையில் மேடையின் உயரம் இருந்தது. அதே உயரத்தைக் கணக்கில் கொண்டு இந்த கலையரங்கம் அமைக்கப்பட்டிருப்பதால், யாருக்கும் பயன்படாத நிலை நீடிக்கிறது என்றார் அவர். 
சரியான திட்டமிடல் இன்றி இந்தக் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளதால், அதன் நோக்கம் நிறைவேறாமல் நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சியினரும், இலக்கிய அமைப்பினரும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இதை சரிசெய்து அனைத்து தரப்பினரின் பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் தலையாய 
கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com