மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் மானிய விலையிலான இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் மானிய விலையிலான இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் 2019-20-ஆம் நிதியாண்டில் தகுதியான உழைக்கும் மகளிருக்கு தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டும் இருசக்கர வாகனம் வாங்க, வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியமாக ரூ. 25,000, இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.  125 சிசி -க்கு மேற்படாத திறன் கொண்ட, கியர்லெஸ் வாகனமாக இருக்க வேண்டும். மேலும், 1.1.2018 தேதி மற்றும் அதற்கு பின்னர் வாங்கப்பட்ட புதிய இருசக்கர வாகனமாக இருக்க வேண்டும். 
பயனாளிகளுக்கான தகுதிகள்: அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நலவாரியங்களில் பதிவுபெற்ற மகளிர், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் மகளிர், சிறு, சுயதொழில் புரியும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களின்கீழ் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மகளிர், கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் தொகுப்பு ஊதியத்திலோ அல்லது தினக்கூலி அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர் மட்டும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். 
  வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் நாளில் இருசக்கர வாகன ஓட்டுநர் பழகுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மானியம் கோரப்படும் நாளில் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரே அக்குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவராக இருக்க வேண்டும். மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட மகளிர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மற்றும்  தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாகனம் வாங்குபவர்களுக்கு மானியத்தொகை முன்இறுதி மானியமாக வரவு வைக்கப்படும்.
 விண்ணப்பிக்கும் முறை: 
அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 
விண்ணப்பத்துடன், பிறப்பு சான்றிதழ் (வயது 18 முதல் 40 வரை), வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் பழகுநர் உரிமம், இருப்பிட ஆதாரம் ( வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு அல்லது விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்ட தொலைபேசிக் கட்டணம், மின்கட்டணம், வீட்டுவரி ரசீது), வருமானச் சான்று (பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று, சுய சான்றொப்பமிட்ட சான்று), பணிபுரிவதற்கான ஆதாரம் (பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று), ஆதார் கார்டு, கல்வித்தகுதி சான்று, 8-ஆம் வகுப்பு
தேர்ச்சிக்கான சான்று (மாற்றுச்சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முதலியன), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, ஜாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (தகுதிபெற்ற அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), வாங்க உத்தேசித்திருக்கும் இருசக்கர வாகனத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட விலைப்புள்ளி, விலைப்பட்டியல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். 
அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த அலுவலகங்களில் நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com