"சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டனர்'

தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர்

தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலர் ஸ்ரீவல்லபிரசாத் கூறினார். 
திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற, காங்கிரஸ் சார்பில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியது: 
தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் மூலம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் பங்கு குறித்தும், நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி அரசை புறக்கணித்துள்ளனர். இதன் மூலம் பாஜக அரசு தமிழகத்துக்கு எதிராக செய்து வரும் விஷயங்கள் பிரதிபலித்துள்ளன. தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசு மோடிக்கும் பாஜக அரசுக்கும் மிகவும் நெருக்கமாக உள்ளது. தமிழகத்தை எதிர்த்து பாஜக அரசு எடுக்கும் எந்த திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் முனைப்பிலேயே அதிமுக அரசு செயல்படுகிறது.
பாஜக அரசு ஒரே மொழி, ஒரே கலசாரம் என முழங்கி வருகிறது. ஆனால், தமிழக கலாசாரம் பாரம்பரியம் அனைத்துமே வேறு. பாஜக அறிவிப்புகள் தமிழகத்திற்கு வேறுவிதமாக இருப்பினும், அதிமுக அரசு அதை ஆதரிப்பது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாட்டில் மிகப்பெரிய பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. ஆனால் பாஜக அரசு மிகப்பெரிய வளர்ச்சி இருப்பதாக ஒரு தவறான தகவலை, உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்து வருகிறது. இதையேதான் அதிமுக அரசும் கடைப்பிடித்து வருகிறது. 
எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிமுக அரசு 2016-ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை. அவர்கள் மக்களைப் பற்றியோ, பெண்களைப் பற்றியோ, மாணவர்களுக்குப் பற்றியோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்றனர். இதனால் தான் தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டினர். அதேபோன்று சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அரசை தோற்கடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்றார் அவர். 
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் அன்பு. வீரமணி, கே.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலில் உயிரிழந்த உதயமார்த்தாண்டபுரம் மாரியப்பன் மனைவி ராஜலெட்சுமிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com