ரயில்வேயில் படித்த திறமையான இளைஞர்களை நியமிக்க வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

ரயில்வே துறை மேற்கொண்டு வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு படித்த திறமையான இளைஞர்களை

ரயில்வே துறை மேற்கொண்டு வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு படித்த திறமையான இளைஞர்களை நியமிக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து, அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வேயில் பொறியியல் துறையில் தண்டவாள பராமரிப்பாளர்கள், இயக்கத் துறையில் பாயிண்ட்ஸ் மேன்கள் , எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் துறைகளில் கலாசிகள் பணியிடங்களுக்கு 2,393 முன்னாள் ராணுவத்தினரை தெற்கு ரயில்வே தேர்வு செய்திருக்கிறது. இவர்களுக்கு சான்றுகள் சரிபார்க்கும் பணி செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை சென்னை ரயில்வே தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்திய அளவில் ஒரு மண்டல ரயில்வே அதிகளவில் இது போன்ற பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் செய்வது இதுவே முதல்முறை.
இவர்களுக்கு பெரு நகரங்களில் ரூ. 22,072, நடுத்தர நகரங்களில் ரூ. 24,660 , சிறிய ஊர்களில் ரூ. 22,968 மாதாந்திர தொகுப்பு ஊதியமாகவும், சீருடைப் படி ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தவிர பணிக்கு சென்றுவர பயண அட்டையும், பணி நிமித்தமாக வெளியூர் சென்றால் ரூ. 500 பேட்டாவும் வழங்கப்படுகிறது. வாராந்திர விடுப்பு கிடைக்கும். 
வாரிசு வேலைத் திட்டத்தில் ரயில்வேயில் விருப்ப ஒய்வு பெற்ற 50 முதல் 60 வயதினரை காலிப் பணியிடங்களில் ஒய்வு பெற்றவர்கள் மறுநியமனத்துக்கு ரயில்வே அனுமதிப்பது இல்லை. ஒய்வு பெற்றவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் சேர்க்க அனுமதித்த நிர்வாகம் முன்னாள் ராணுவத்தினரை ஐம்பது வயதுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதித்தது. தொடர்ச்சியாக 15 முதல் 25 ஆண்டுகள் இவர்களை பணியாற்ற வைக்க முடியும் என்பதே இதன் நோக்கம். 
முன்னாள் ராணுவத்தினர் சேர்கை நிரந்தர பணியில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனமாகும். மேலும், நிரந்தர பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனங்களை முன்னாள் ராணுவத்தினரை கொண்டு மேற்கொண்டால் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பது கூடுதல் நோக்கம். பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானது. இவர்கள் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்காத பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இல்லை. 
முன்னாள் ராணுவத்தினர் நியமனங்களால் கடைநிலை பணியில் நிரந்த பணியாளர்கள் நியமனம் நின்றுபோகும் அல்லது மிகக் குறைவாக மாறும். மேலும், பணியில் உள்ள நிரந்த ஊழியர்களின் பதவி உயர்வுகளும் பறிபோகும். ரயில்வே துறை மேற்கொண்டு வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு படித்த திறமையான இளைஞர்கள் நியமனமே கைகொடுக்கும். 
ரயில்வே குரூப் -டி பதவிகளில் முன்னாள் ராணுவத்தினர் நியமனம் நிரந்தர பணியாளர்களை குறைக்கும் திட்டம். எனவே, நிரந்தர பணியாளர்களை உடனே தேர்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com