பொலிவுறு நகரத் திட்டம்: விலங்கினங்களுக்கு புகலிடமளிக்கும் கோடியக்கரை சரணாலயம்!

பொலிவுறு நகரத் திட்டம்: விலங்கினங்களுக்கு புகலிடமளிக்கும் கோடியக்கரை சரணாலயம்!

தஞ்சாவூர் பொலிவுறு நகரத் திட்டத்தில் அரை நூற்றாண்டுகால பெருமையுடைய சிவகங்கை பூங்காவில் இயற்கையின் அடையாளமாக பராமரிக்கப்பட்ட  மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு விலக்களிக்கப்படுவது



தஞ்சாவூர் பொலிவுறு நகரத் திட்டத்தில் அரை நூற்றாண்டுகால பெருமையுடைய சிவகங்கை பூங்காவில் இயற்கையின் அடையாளமாக பராமரிக்கப்பட்ட  மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு விலக்களிக்கப்படுவது இயற்கை ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது. அதே நேரத்தில், கஜா புயலில் இயற்கை வளத்தை இழந்துள்ள போதிலும், நவீன திட்டங்களால் புறக்கணிக்கப்படும் இதுபோன்ற விலங்கினங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது கோடியக்கரை வன உயிரின சரணாலயம்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் உள்ள 41 புள்ளிமான்களை நாகை மாவட்டம், கோடியக்கரை வனப் பகுதியில் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் மாநகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்புக்குள்பட்ட சிவகங்கை பூங்கா அரை நூற்றாண்டுகால பெருமையுடையது. இங்கு மான்கள், முயல், நரி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.
காவிரிப் படுகையின் மையமாகத் திகழும் தஞ்சாவூரில், வனங்களில் மட்டுமே காணப்படும் விலங்குகளை பூங்காவில் காண்பது இயற்கை ஆர்வலர்களுக்கு ஆறுதலாக அமைந்து வந்தது. மேலும், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டுமல்லாது இயற்கையின் எச்சங்களாகவும், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி வந்தது. 
மேலும், இயற்கையோடு ஒன்றி இருந்த மனித குலம், அதிலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளது என்பதையும் உணர்த்தி வந்துள்ளது. தஞ்சை நகரப் பகுதிக்குள் அமைந்த இந்த இயற்கையின் அடையாளம் இளைய தலைமுறையினருக்கு ஏதோ ஒரு வகையில் படிப்பினையைத் தந்திருக்கும். ஆனால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ், ரூ.1.17 கோடியில் மேம்படுத்தப்படும் பணியில் இயற்கையின் அடையாளங்கள் துண்டாடப்படுவது வேதனை அளிக்கிறது. 
இயற்கைக்கு விலக்களித்து நீச்சல்குளம், நீர் ஊற்று என செயற்கைக்கு பெருந்தொகையை செலவிடுவது இயற்கைக்கு முரணாகவே அமைகிறது. இதனால், இந்தப் பூங்காவில் உள்ள 8 ஆண் மான்கள் உள்பட மொத்தம் 41 புள்ளி மான்கள், 9 முயல்கள், 8 சீமை எலிகள் போன்றவை தங்கள் வாழ்விடத்தை இழக்க நேரிடுகிறது. காரணம், இவை அனைத்தையும் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் விடுவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட அரிய வகை வெளிமான்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், குரங்குகள், நரி, காட்டுப் பன்றி என பல வித காட்டு விலங்குகள் பாரம்பரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதர்களுக்கு பயன்பட்டு, வாகனப் பெருக்கத்தால் விலக்களிக்கப்பட்ட குதிரைகளுக்கும், பொதி சுமந்த கழுதைகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் புகலிடமாகத் திகழ்கிறது கோடியக்கரை.  அதேபோல, உழவுத்தொழிலில் இயந்திரமயம் மேலோங்கியதால் விலக்குபெற்ற நாட்டு மாடுகளைக் காட்டுமாடுகளாக்கி அரவணைத்துள்ளது இச்சரணாலயம். இப்படி பல நிலைகளில் புறக்கணிக்கப்படும் குரங்குகள் உள்ளிட்ட 
விலங்குகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வந்துள்ளது. அந்த வகையில், இப்போது சிவகங்கை பூங்கா உயிரினங்களையும் அரவணைக்கத் தயாராகிறது கோடியக்கரை.
பாதுகாப்பு தேவை:  அதேநேரத்தில் இங்கு விடப்படவுள்ள விலங்குகளுக்கு நோய்த் தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் ஏதும் உள்ளனவா என்பதை ஆராய்வதில், வனத்துறையினர் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பொதுவாக, கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து வெளியேறும் மான்கள் திரும்பக் கிடைத்தால் அவை முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படும். 
அத்துடன், தஞ்சாவூரில் திறந்தவெளியில் இருந்த பூங்கா மான்களை சாலையோரங்களில் விட்டுவிடாமல் அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். கோடிக்கணக்கான திட்ட மதிப்பீடுகளில் உருவாகும் திட்டங்களில், செயற்கைக்கு முக்கியத்துவம் அளித்து இயற்கையின் அருட்கொடையாம் வன உயிரினங்களுக்கு விலக்களிக்கப்படும் நிலையில், ஏற்கெனவே கஜா புயலில் தன் வளத்தை இழந்து போதிய பராமரிப்பு இல்லாது காணப்படும் கோடியக்கரை சரணாலயம், இயற்கையை எந்த நிலையிலும் அணைத்துக் கொள்ளும் இதயமாக திகழ்கிறது என்றால் அது மிகையில்லை. 
ஆனாலும், வளர்ச்சித் திட்டங்களில் இயற்கைக்கு விலக்களிப்பது தவிர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com