புதை சாக்கடை பராமரிப்பு குறைபாடு: மயிலாடுதுறை நகராட்சி மீது வழக்கு தொடர முடிவு
By DIN | Published On : 29th September 2019 06:01 AM | Last Updated : 29th September 2019 06:01 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் புதை சாக்கடையை சரிவர பராமரிக்காத நகராட்சி நிர்வாகத்தின் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்பு கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அதன் தலைவர் வழக்குரைஞர் ராம.சேயோன் வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை நகராட்சி தற்போது புதை சாக்கடையை சரிவர பராமரிக்காமல், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு நகரெங்கும் புதை சாக்கடை கழிவுநீர் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், புதைசாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கால்நடைகள் அருந்தினால், இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமன்றி, நகரின் முதன்மை சாலைகள் எங்கும் புதை சாக்கடை கிணறுகளில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சேரி சாலை, தரங்கம்பாடி சாலை தொடங்கி, தற்போது திருவாரூர் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை நகரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பிரச்னையை, நகராட்சியும், அரசாங்கமும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
எனவே, மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடி, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில், புதை சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு, உரிய முறையில் பராமரிக்க உரிய உத்தரவு வழங்கக் கோரியும் விரைவில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.