மகாளய அமாவசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி, பூம்புகார் மற்றும் திருவெண்காடு ருத்ரபாதத்தில் திரளானோர் தங்கள் முன்னோர்களுக்கு சனிக்கிழமை தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மகாளய அமாவசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்


பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரையில்...
மகாளய அமாவாசையையொட்டி, பூம்புகார் மற்றும் திருவெண்காடு ருத்ரபாதத்தில் திரளானோர் தங்கள் முன்னோர்களுக்கு சனிக்கிழமை தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசையையொட்டி, காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறை மற்றும் கடலில், திரளானோர் நீராடி முதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அத்துடன் சுமங்கலிப் பெண்கள் எலுமிச்சைப் பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருள்களைக் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் வைத்து, காவிரி அம்மனுக்கு சமர்ப்பணம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்.   இதேபோல், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய முக்குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கோயிலில் அமைந்துள்ள ருத்ரபாதத்தில் முன்னோர்கள் நினைவாக ஆயிரக்கணக்கானோர் திதி கொடுத்து  வழிபட்டனர். 
பூம்புகார் சங்கமத்துறையில் பக்தர்கள் புனித நீராட ஏதுவாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டுமென தினமணியில் ஏற்கெனவே செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைதம்பியிடம் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார். 
இதையடுத்து, மேலையூர் உதவி பொறியாளர் கனக சரவணசெல்வன் மேற்பார்வையில், மேலையூர் சட்ரஸ் அணையிலிருந்து சனிக்கிழமை அதிகாலை காவிரி  ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆறு கடலோடு சங்கமித்தது. காவிரியில் தண்ணீர் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியோடு காவிரி மற்றும் கடலில் ஒரே நேரத்தில் புனித நீராடினர்.இதற்காக எம்எல்ஏ பி.வி. பாரதி, பொதுப்பணித்துறையினர் மற்றும் தினமணிக்கு பூம்புகார் வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்கர் நன்றி தெரிவித்தார்.  
வேதாரண்யம் ,கோடியக்கரையில்...
 மகாளய அமாவாசையையொட்டி, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஆடி, தை, மஹோதயம் மற்றும் மகாளய அமாவாசை நாள்களில் வேதநதி எனும் வேதாரண்ய சன்னிதிக் கடல், ஆதி சேது எனப்படும் கோடியக்கரை முழுக்குத்துறை பகுதியில் புனித நீராடல் செய்வது வழக்கம். மகாளய அமாவாசை நாளான சனிக்கிழமை வேதாரண்யம், கோடியக்கரை கடல் பகுதி, வேதாமிர்த ஏரி, வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகை தீர்த்தம் ஆகிய இடங்களில் ஏராளமானோர் புனி நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர். 
ராமேசுவரம், கன்னியாகுமரியில்...
ராமேசுவரத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்தக் கடலில் சனிக்கிழமை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
மஹாளய அமாவாசையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதிகாலையில் அக்னி தீர்த்தக் கரையில்  மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து  புனித நீராடி வழிபாடு நடத்தினர்.  இதன் பின் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர்.  மேலும்  கோதரண்டராமர் கோயிலில் ராமகிருஷ்ண மடம் விவேகானந்த குடில் சார்பில் சுவாமி பிரணவானந்தா தலைமையில் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில்: புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி, பாபநாசம்,  திருச்செந்தூர், குற்றாலத்தில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி,  முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி, முன்னோருக்கு பலிகர்மம் செய்தனர். தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோயில், பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு: இதையொட்டி, பகவதியம்மன் கோயில் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு, பகலில் அன்னதானம், மாலையில் சாயரட்ச பூஜை, இரவில் அம்மன் பல்லக்கில் 3 முறை கோயிலை வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com