திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் பணிகள் தேக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், பல்வேறு பணிகள் தேங்கிய நிலையிலும், மந்தமாகவும் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 
திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் பணிகள் தேக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், பல்வேறு பணிகள் தேங்கிய நிலையிலும், மந்தமாகவும் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 

தமிழகத்தின் முக்கியத் துறைகளில், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்களின் பணிகள் மிக முக்கியமானதாகும். சுகாதார ஆய்வாளர்கள்,  நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எந்த வித நோய்கள் வந்து விடாமல், தடுக்கக் கூடிய பாதுக்காப்பு பணியில் ஈடுபட வேண்டும். பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். நகரத்தில் இயங்கும் அனைத்துக் கடைகளையும் நேரில் பார்வையிட்டு, கடைக்கான உரிமையை வழங்க வேண்டும். கெமிக்கல் மற்றும் பெயிண்ட்டிங் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி தயார் செய்யக் கூடிய கடைகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் இல்லாமல் இருப்பதை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை கவனிக்க வேண்டும். 

அரசு உத்தரவிட்டுள்ள பாலித்தீன் ஒழிப்புகளை விசாரிக்க வேண்டும். தற்போது, உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கரோனா தொற்றுப் பணிகளை முழுவதுமாக கவனிக்க வேண்டும். கரோனா பணியில், கரோனா உறுதி செய்யப்பட்ட வீடுகள் முதல் சுற்றியுள்ள இடங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருடைய முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அடைப்பது முதல், பிறகு அதை பிரிப்பது வரை கவனிக்க வேண்டும். மருத்துவமனையிலிருந்து வந்த பிறகும் கண்காணிப்பது உள்ளிட்ட தொடர் பணிகள் தாராளமாக சுகாதார ஆய்வாளர்களுக்குரிய பணிகளாகும். 

இவ்வளவு பணிகளையும் செயல்படுத்த தேவையான சுகாதார ஆய்வாளர்கள் இல்லாததால், இந்த கரோனா காலத்தில் பல்வேறு பணிகள் மந்த நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் என 4 நகராட்சிகள் உள்ளன. சுகாதார ஆய்வாளர்கள் திருவாரூரில் 5 பேருக்கு ஒருவரும், மன்னார்குடியில் 6 பேருக்கு ஒருவரும், கூத்தாநல்லூரில் ஒருவரும்தான் உள்ளனர். திருத்துறைப்பூண்டியில் சுகாதார ஆய்வாளரே இல்லை. திருவாரூர் மாவட்டத்தில், 13 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 3 பேர் மட்டுமேதான் உள்ளனர். இதே நிலைதான் தமிழகம் முழுக்க தட்டுப்பாட்டில் தழும்பி நிரம்பியுள்ளன. 

சுகாதார ஆய்வாளர் பணிக்கு 2014 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்ததுடன் உள்ளது. கடந்த ஆண்டு 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளதாகத் தெரிகிறது. தேவையான சுகாதார ஆய்வாளர்கள் இல்லாததால், அனைத்துப் பணிகளையும் முழுமையாக கவனிக்கப்படாமல் தேங்கிய நிலை ஏற்படுகிறது. பிறப்பு, இறப்புச்  சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றாலும், பதிவு செய்யும் இடத்தில் கூடுதலான கட்டணம் வசூலிப்பதால், நகராட்சிக்கே நேரடியாகச் சென்று குறைந்த கட்டணத்தில், கையெழுத்துடன் வாங்கிக் கொள்ளலாம் என நகராட்சிக்கு வருகின்றனர். 

பணிகள் தேக்கம் இல்லாமல் நடைபெறவும், பொதுமக்கள் சிரமம் இல்லாமல் இருக்க சுகாதார ஆய்வாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com