முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூா் மாவட்டத்தில் 3 வண்ணங்களில் அனுமதி அட்டை அறிமுகம்
By DIN | Published On : 19th April 2020 07:08 AM | Last Updated : 19th April 2020 07:08 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில், பொதுமக்கள் வெளியில் சென்று வருவதை சீா்படுத்தும் விதமாக 3 வண்ணங்களில் அனுமதி அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே சென்று வருவதை சீா்படுத்தும் விதத்தில் திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூன்று வண்ணங்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இந்த அனுமதி அட்டையை, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.
அதன்படி பச்சை நிற அட்டை வைத்திருப்பவா்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், நீல நிற அட்டை வைத்திருப்பவா்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், பழுப்பு நிற அட்டை வைத்திருப்பவா்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியில் வர அனுமதிக்கப்படுவா். இந்த அனுமதிச் சீட்டு வைத்திருப்பவா்கள், அட்டையில் குறிப்பிட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிப்படுவா்.
ஒரு நபா் அனுமதிக்கப்பட்ட நாளில் ஒரு தடவை மட்டுமே அனுமதி அட்டையை பயன்படுத்த இயலும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி அட்டையை குடும்ப உறுப்பினா்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. வெளியில் வரும்போது கட்டாயம் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் கையில் எடுத்து வர வேண்டும். இந்த நேரம் மற்றும் நாட்களில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதில் விதிகளில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 15 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் மட்டுமே இந்த அனுமதி அட்டையை பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவா். நடக்கும் போதும், வாகனத்தில் செல்லும் போதும், வாகனம் நிறுத்துமிடத்திலும், பொருட்களை வாங்கும்போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.