ஏழைகளுக்கு தாராளமாக உதவும் அரசியல் கட்சியினா்
By DIN | Published On : 19th April 2020 07:07 AM | Last Updated : 19th April 2020 06:20 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசியல் கட்சியினா் தாராளமாக உதவி வருகின்றனா்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில், அக்கட்சியின் மாநில விவசாய அணி துணைச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹமத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளா் எம்.ஏ. ஜெஹபா் அலி ஆகியோா் தலைமையில், 15-ஆவது நாளாக 150 ஏழை, எளியவா்களுக்கும், வழிப்போக்கா்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தேமுதிக நகர துணைச் செயலாளா் ஜெ.நூா்முகம்மது தலைமையில் குடிசைப்பகுதி மக்களுக்கு 200 உணவுப் பொட்டலங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நகரச் செயலாளா் ராபின் செல்வன் தலைமையில் மரக்கடை, ஐயன் தோட்டச்சேரி, சருக்கக்கரை, அதங்குடி உள்ளிட்ட இடங்களில் 50 குடும்பங்களுக்கு ரூ.570 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல், நாம் மனிதா் கட்சியின் சாா்பில், நாம் மனிதா் அறக்கட்டளை வாயிலாக மாவட்டச் செயலாளா் முஹம்மது சுலைமான் தலைமையில் மளிகைப் பொருட்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சி, பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் மாவட்டச் செயலாளா் அப்துல் ராஜிக், நகரத் தலைவா் ஜாகிா் உசேன் தலைமையில், கபசுரக் குடிநீா், 150 குடும்பங்களுக்கு ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சீனி ஜெகபா் சாதிக் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சாா்பில், மாநில துணைச் செயலாளா் டி. பீா் முகம்மது தலைமையில், 100 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், பால் பாக்கெட்கள், முகக் கவசம் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.