நன்னிலம் அருகே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்: பொதுமக்கள் எதிர்ப்பு

திருவாரூர், மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் மாற்றுவழி இருந்தும் 70க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துச் சாலை விரிவாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முடிகொண்டான் கிராமத்தில் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள வீடுகள்.
முடிகொண்டான் கிராமத்தில் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள வீடுகள்.

திருவாரூர், மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் மாற்றுவழி இருந்தும் 70க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துச் சாலை விரிவாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர், மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் நன்னிலம் அருகே முடிகொண்டான் என்ற கிராமம் உள்ளது. இந்த மாநில நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன.தற்போது சென்னை கன்னியாகுமரி தொழிற்தட சாலை அமைக்கும் திட்டத்தில், முடிகொண்டான் கிராமத்தின் சாலையின் இருபக்கமும் உள்ள 70க்கும் மேற்பட்ட வீடு, கடைகளை இடித்துச் சாலை விரிவாக்கப் பணி செய்திட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 2016ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து, தற்போது சாலை விரிவாக்க திட்டம் இல்லை என்ற பதில் வந்துள்ளது. 

ஆனால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்தப் பணியை கன்னியாகுமரி சென்னை தொழிற்தட சாலை என்ற பெயரில் துவக்கியுள்ளனர். இந்த வீடுகள் மற்றும் கடைகளை இடிக்காமல் சாலை விரிவாக்கம் செய்திட மாற்றுவழி இருந்தும் அதிகாரிகள் அதனைச் சிந்திக்க மறுப்பதாக பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர். இந்தச் சாலை விரிவாக்கப் பணிக்கு 2016 ஆம் ஆண்டிலிருந்து, கிராம மக்கள் தங்களது தொடர் எதிர்ப்பபைத் தெரிவித்து வருகின்றனர். இந்த கோரிக்கைச் சம்பந்தமாக தமிழக உணவுத் துறை அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், குறிப்பிட்ட சாலை விரிவாக்கத் திட்ட பணியின் திட்ட இயக்குனர், முதன்மைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் போன்ற பல்வேறு நிலையிலும் உள்ள அதிகாரிகளுக்குத் தங்கள் கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர். 

முடிகொண்டான் ஊராட்சிமன்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனையும் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை கோரிக்கைக்குச் சாதகமான பதில் எங்கிருந்தும் வரவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள சாலை விரிவாக்கப் பணியினால், ஏழை குடும்பத்தைச் சார்ந்த விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். மிகக்குறைந்த பரப்பளவிலேயே தங்களது வீடுகளைக் கட்டி உள்ளதால் வீட்டின் முன் பகுதி இடிக்கப்பட்டால் பின்னர் அந்த வீட்டில் வசிப்பதற்கே முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், அரசாங்கத்துக்கும் குறைந்த தூரத்தில், குறைந்த செலவில் சாலை விரிவாக்கம் செய்திட மாற்றுவழி இருந்தும் அதனைச் செயல்படுத்திட முன்வராத அதிகாரிகளின் போக்கினை இப்பகுதி மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். எனவே அரசு அதிகாரிகள், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிகொண்டான் கிராமத்திற்கு அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றுப் பாலத்திலிருந்து நேரடியாக மாற்றுப்பாதையில் சாலை விரிவாக்கப் பணியை செய்திட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக முடிகொண்டான் கிராமத்தில் பாதிக்கப்படும் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள வீடுகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com