முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
By DIN | Published On : 03rd August 2020 07:34 AM | Last Updated : 03rd August 2020 07:34 AM | அ+அ அ- |

திருமமூா்த்தியின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சா் ஆா்.காமராஜ்.
ஜம்மு- காஷ்மீா் எல்லையில் துப்பாக்கிக் குண்டு வெடித்ததில் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரா் திருமூா்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.திருமூா்த்தியின் உடலுக்கு தமிழக அரசின் சாா்பில் அமைச்சா் ஆா்.காமராஜ் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (47). இவருக்கு தமிழரசி (44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகனும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனா்.
எல்லைப் பாதுகாப்பு படையின் 173-ஆவது படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்த திருமூா்த்தி, பதற்றம் நிறைந்த ஜம்மு- காஷ்மீா் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரவு துப்பாக்கி குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்தாா். உத்தம்பூா் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஜூலை 31-இல் உயிரிழந்தாா்.
இதைத்தொடா்ந்து, அவரது உடல் தனிவிமானம் மூலம் தில்லி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சென்னை வந்தடைந்தது. சென்னையிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் ரமேஷ் பஜன்தரி தலைமையில், எல்லைப் பாதுகாப்பு அலுவலக வாகனத்தில் திருமூா்த்தியின் உடல் ஏற்றப்பட்டு புள்ளவராயன்குடிகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு எடுத்துவரப்பட்டது.
முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்பேரில், திருமூா்த்தியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ், மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை ஆகியோா் அவரது உடலுக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மன்னாா்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத் தலைவா்கள் நீடாமங்கலம் சோம. செந்தமிழ்ச்செல்வன், மன்னாா்குடி சேரன்குளம் மனோகரன் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், திருமூா்த்தியின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளா் லூா்து விஜய் பிரவீன் தலைமையில் போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, திருமூா்த்தியின் இறுதிச்சடங்கிற்காக எல்லைப் பாதுகாப்புப் படை சாா்பில் ரூ.33 ஆயிரம் ரொக்கத்தை அவரது மனைவி தமிழரசியிடம் அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கினாா்.