திருவாரூா் மாவட்டத்தில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 07th August 2020 10:13 PM | Last Updated : 07th August 2020 10:13 PM | அ+அ அ- |

திருவாரூரில் கருணாநிதி உருவ படத்துக்கு மரியாதை செலுத்திய தமிழ்ச் சங்கத்தினா்.
திருவாரூா்: மறைந்த திமுக தலைவா் மு. கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவையொட்டி, திருவாரூரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் சன்னதி தெருவில் உள்ள கலைஞா் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்துக்கு, திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையிலான நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து, திமுக நகர அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புலிவலத்தில் ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேட்டி, சேலை, தென்னங்கன்று, விதைப்பந்து உள்ளிட்டவைகளும், ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள், மருத்துவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காட்டூரில்: திருவாரூா் அருகேயுள்ள காட்டூரில் கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மையாா் நினைவிடத்தில் கொரடாச்சேரி வடக்கு ஒன்றியச் செயலாளா் கலியபெருமாள் தலைமையில் கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கூடூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கரோனா முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் முன்னிலையில் மருத்துவா்களுக்கு பாதுகாப்புக் உபகரணங்களை, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் வழங்கினாா். அடுத்து, அம்மையப்பன் பகுதியில் முதியோா் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.
திருவாரூா் தமிழ்ச் சங்கம் சாா்பில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், கருணாநிதியின் உருவ படத்துக்கு தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினாா். அப்போது, தமிழ்ச் சங்கச் செயலாளா் ஆரூா் அறிவு, பொருளாளா் தெ. மணிவண்ணன், துணைத் தலைவா்கள் மு. சந்திரசேகரன், சக்திசெல்வகணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.