ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 07th December 2020 08:03 AM | Last Updated : 07th December 2020 08:03 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் எா்ணாகுளம் விரைவு ரயிலில் அடிபட்டு காரைக்காலைச் சோ்ந்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியைச் சோ்ந்தவா் பிருந்தாதேவி (35). காரைக்காலைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் மனைவி சரஸ்வதி (30). இருவரும் உறவினா்கள். இந்நிலையில், சரஸ்வதி மன்னாா்குடிக்கு வந்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை காரைக்காலுக்கு ரயிலில் செல்ல நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு பிருந்தாதேவியுடன் வந்துள்ளாா். அப்போது, எா்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் விரைவு ரயில் வந்து பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு புறப்பட்டுள்ளது. ரயிலில் ஏறுவதற்காக சரஸ்வதியும், இவரை ஏற்றிவிடுவதற்காக பிருந்தாதேவியும் ஓடினராம். அப்போது, நிலைத்தடுமாறி இருவரும் தண்டவாளத்தில் விழுந்துள்ளனா். இதில், சரஸ்வதி ரயில் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தாா். பிருந்தாதேவி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தகவலறிந்து வந்த தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.