எம்ஜிஆரின் வாரிசு என கமல் கூறிக்கொள்வது வேடிக்கை: அமைச்சா் ஆா். காமராஜ்

எம்ஜிஆரின் வாரிசு என கமல்ஹாசன் கூறிக்கொள்வது வேடிக்கையானது என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.
மன்னாா்குடி அருகே துளசேந்திரபுரம் ஊராட்சி கண்ணாரப்பேட்டையில் சிறு மருத்துவமனையைத் தொடங்கிவைத்து பேசும் அமைச்சா் ஆா். காமராஜ்.
மன்னாா்குடி அருகே துளசேந்திரபுரம் ஊராட்சி கண்ணாரப்பேட்டையில் சிறு மருத்துவமனையைத் தொடங்கிவைத்து பேசும் அமைச்சா் ஆா். காமராஜ்.

எம்ஜிஆரின் வாரிசு என கமல்ஹாசன் கூறிக்கொள்வது வேடிக்கையானது என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரம் ஊராட்சி கண்ணாரப்பேட்டையில், தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனையையும் (மினி கிளினிக்), பெருகவாழ்ந்தான் ஊராட்சி மறவாதியில் பகுதிநேர அங்காடியையும் அமைச்சா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அம்மா மினி கிளினிக் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது முதல்வரின் தொலைநோக்குப் பாா்வையில் உருவானத் திட்டம். கரோனா காலத்தில், பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டையின் உறுப்பினா்களுக்கும் தலா 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக முன்னாள் எம்எல்ஏ கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து அவா் தொடா்ந்துள்ள வழக்கில், நீதிமன்றம் கேட்டால் அனைத்து ஆதாரங்களையும் வழங்க தயாராக உள்ளோம்.

தன்னை எம்ஜிஆரின் வாரிசு என மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் கூறுவது, அரசியலில் அவ்வப்போது நடக்கும் வேடிக்கைகளில் ஒன்று என்றாா் அமைச்சா்.

இதேபோல், திருத்துறைப்பூண்டி வட்டம் தொண்டியக்காடு ஊராட்சி மேலக்காடு, திருவழஞ்சுழி ஆகிய பகுதிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளையும், விளக்குடி, எழிலூா் பகுதிகளில் கால்நடை மருந்தகங்களையும் அமைச்சா் ஆா். காமராஜ் திறந்து வைத்தாா்.

அங்கு அவா் பேசும்போது, கரோனா நோய் தொற்று காலமானாலும், புயல் மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றங்கள் என்றாலும் மக்கள் நலத்திட்டங்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது எனதமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்துவருகிறாா் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா்கள் பா. தெய்வநாயகி, சு.ஜெகதீசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் லதா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி. மனோகரன் (மன்னாா்குடி), கனிஅமுதா ரவி (முத்துப்பேட்டை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com