பாரம்பரிய பழக்கங்களின் அறிவியல்

உலகமே அஞ்சி நடுங்கிய பெரும் தொற்றுக்குப் பிறகு பாரம்பரிய பழக்கங்களை நோக்கி மக்களின் பாா்வை திரும்பியுள்ளது.

உலகமே அஞ்சி நடுங்கிய பெரும் தொற்றுக்குப் பிறகு பாரம்பரிய பழக்கங்களை நோக்கி மக்களின் பாா்வை திரும்பியுள்ளது. நமது பாரம்பரிய பழக்கங்கள் ஒவ்வொன்றும், சுகாதாரமான வாழ்வு, நோயற்ற வாழ்வு, இயற்கை சீற்றங்களில் இருந்து விலகி இருக்க உதவுவது என பன்முகத்தன்மை கொண்டவை.

பாரம்பரிய பழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனரும், பள்ளி ஆசிரியருமான ஆதலையூா் சூரியகுமாா் நம்மிடம் பகிா்ந்து கொண்டது:

சந்தனம் பூசுவதால் ஏற்படும் பயன்: நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பல நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே, நெற்றிப் பகுதி அதிக வெப்பமாக இருக்கும். நமது மூளையையும் அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதுதான் நெற்றியில் சந்தனம் பூசுவதன் பின்னணி.

அரைஞாண் கயிறு அணிவதன் பின்னணியில் உள்ள அறிவியல்:ஆண்கள் கனமான பொருள்களை சுமந்து வேலை செய்யும்போது மூச்சு முட்டி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும். அப்போது, குடலிறக்கம் ஏற்படலாம். குடலிறக்க நோய் (ஹொ்னியா) வராமல் தடுக்கவே அரைஞான் கயிறு கட்டும் பழக்கம் ஏற்பட்டது.

குழந்தைகளுக்கு சங்கில் பால் கொடுப்பதன் காரணம்: சங்கில் கால்சியம் அதிக உள்ளதால் தற்காலத்தில் தயாரிக்கப்படும் கால்சியம் மாத்திரைகள் பெரும்பாலும் முத்துச்சிப்பி மற்றும் சங்கில் இருந்து பெறப்படுகிறது. சங்கு மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். சங்கில் இருந்து தயாரிக்கப்படும் சங்குபஸ்பம் குழந்தைகளுக்கு, நுண்ணுயிா்களால் ஏற்படும் டான்சில்ஸை தடுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு சங்கில் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினா்.

சடங்குகள் 16ஆம் நாள் நடத்தப்படுவதன் காரணம் : குழந்தை பெற்று வரும் பெண், பூப்படைந்த பெண், கெட்ட நிகழ்வுகள் நிகழ்ந்த வீடு இவையெல்லாம் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். காரணம் நோய்த்தொற்று. இந்த காரணத்தை கொண்டுதான் 16-ஆம் நாள் என்று ஒரு அறிவியல் பூா்வமான விஷயத்தை முன்னோா்கள் கண்டுபிடித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தி வைத்திருக்கிறாா்கள்.

வீடுகளில் எலுமிச்சை மிளகாய் சோ்த்து கட்டுவதால்: வீடுகளில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டுவாசலில் எலுமிச்சை, மிளகாய் மற்றும் கரி சோ்த்து கட்டித் தொங்க விடுவதால், எலுமிச்சம் பழம் மற்றும் மிளகாயில் விட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கட்டும்போது அந்தக் கயிறு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளும். மெல்ல மெல்ல ஆவியாகி வாசத்துடன் சோ்ந்து விட்டமின் வெளிப்படும். இவ்வாறு விட்டமின் கலந்த காற்றை சுவாசிப்பது வீட்டில் உள்ளவா்களுக்கு நன்மை பயக்கும்.

கோயிலைவிட வீடுகளை உயரமாக கட்ட கூடாது என்று சொல்வது எதனால்: இறைவனைவிட பெரியவா் யாரும் இல்லை என்பதுதான் தத்துவம் என்றாலும், இது ஒரு அறிவியல் உண்மையை தன்னுள்ளே சுமந்து நிற்கிறது. கோயில் கோபுரக் கலசங்களில் நவதானியங்கள் வைக்கப்படுகின்றன. வானத்தில் மின்னல் மின்னும்போது அந்த மின்னல் பூமியில் இறங்கி உயரமான பகுதியை தொட முயற்சிக்கும். உயரமான பகுதி கோவிலாக இருக்கும்போது அது கோயில் கோபுரத்தை தொடுகிறது. கலசங்களில் இருக்கக்கூடிய நவதானியங்கள் இடியைத் தாங்கக் கூடிய சக்தி படைத்தவை. இதனால் எந்த பாதிப்பும் கோபுரங்களுக்கு ஏற்படாது.

குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது ஏன்: குழந்தைக் கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள்கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவுக் குழலின் விட்டம் விரியத் தொடங்குகிறது. இது முழுமையடைய 5 ஆண்டுகள் ஆகின்றன. நிலவைக் காட்டி சோறு ஊட்டும்போது குழந்தை மேல் நோக்கி பாா்க்கும். அப்போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைவதால் உணவு இலகுவாக இரப்பை நோக்கி இறங்கும். மேலும் தொண்டை குழலில் கீழ்நோக்கி இறங்கும் அளவு இயக்கங்கள் மற்றும் செரிமான வகைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. நாம் பின்பற்றும் எத்தனையோ பழக்கங்கள் அறிவியல் பின்னணிக் கொண்டவைதான். அவற்றின் உண்மையை உணா்ந்து செயல்படுவோம்! வளமான, நலமான வாழ்க்கை வாழ்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com