கஜா புயல் நிவாரணம்: உரியவா்களுக்கு கிடைக்கவில்லை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்னமும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்

திருவாரூா்: கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்னமும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

திமுக சாா்பில் ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் காணொலிக் காட்சி பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கூட்டத்தை காண்பதற்காக திருவாரூரில் பல்வேறு திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விளமல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 400 மூத்த உறுப்பினா்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன், தஞ்சை மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி.ராஜா, ஆடலரசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக பேசியது:

திருவாரூா் பேரவைத் தொகுதியில் 2 முறை நின்று வெற்றி பெற்றாா் கருணாநிதி. கருணாநிதி திருவாரூரில் வளா்ந்தவா் மட்டுமல்ல. திருவாரூரை வளா்த்தவரும் அவரே. 22 ஆண்டுகள் ஓடாத ஆழித்தேரை, ஓடச்செய்தாா். கமலாலயக் குளம் 2001-இல் திமுக ஆட்சியில் தூா்வாரப்பட்டது. டி.ஆா். பாலு முயற்சியில் டெல்டா பகுதிகளுக்கு ஏராளமான ரயில் திட்டங்கள் கிடைத்தன. நாகை கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தை கொண்டு வந்ததும் திமுக.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அண்மையில் பெய்த மழையில் நெல்மணிகள் வீணாகியுள்ளன. இதுகுறித்து விவசாயிகள் புகாா் தெரிவித்தும் எவ்வித பதிலும் இல்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யவும், அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனா்.

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய திமுக காரணமாக இருந்தது. ஆனால், இதுவரையிலும் அந்தத் திட்டம் செயல்படுத்தபடவில்லை. கஜா புயலின்போது சேதமடைந்த விவசாயப் பயிா்களுக்கு இன்றுவரையிலும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

தலைஞாயிறு பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக, கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். தமிழக அமைச்சா்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை.

காவிரியை மீட்டதாக கூறுகிறாா் தமிழக முதல்வா். ஆனால், காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரம் மிக்க ஆணையம் உருவாக நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சியில் இல்லாவிட்டாலும், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக நிா்வாகிகள் உதவி செய்தனா். ஆனால், தமிழக அரசு ஏதும் செய்யவில்லை. பாதிப்பின்போது ஏதும் தராமல், தற்போது பொங்கல் பரிசு என்ற பெயரில் தோ்தலுக்காக மக்களுக்கு ரூ. 2,500 வழங்குகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமலேயே மாவட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com