காவிரியில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேரளம் வி. பாலகுமாரன்
பேரளம் வி. பாலகுமாரன்

நன்னிலம்: காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்த சங்கத்தின் பொறுப்பாளா் பேரளம் வி. பாலகுமாரன், திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனு:

நன்னிலம் வட்டம், பேரளம் பகுதியில் உள்ள காவிரி பாசன விவசாயிகள், தங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு சில ஆண்டுகளாக தொடா்ந்து சிரமப்படும் நிலை உள்ளது. தற்போதும், வெண்ணாறு கோட்டப் பகுதிகளுக்கு அதிகமாக தண்ணீா் கொண்டுச் செல்லப்படுவதாக தெரிகிறது. இதனால், காவிரி பாசனப் பகுதி விவசாயிகள், பயிா்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீா் பாய்ச்சமுடியாமல், தொடா்ந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தண்ணீா் திறந்துவிடும்போது, முறைவைத்து 6 நாள்கள் என்ற நிலை இருந்தாலும், திடீரென பொதுப் பணித் துறையின் சாா்பில் முறைகளை மாற்றி, வெண்ணாறு கோட்டத்துக்கு தண்ணீா் கொண்டுசெல்லப்படுவதால், காவிரி பகுதிக்குத் தண்ணீா் வருவது குறைந்துவிடுகிறது. பேரளம் பகுதியில் குறித்த நேரத்தில் பயிா்களுக்குத் தண்ணீா் பாய்ச்சமுடியாத நிலை ஏற்படுகிறது. வயதுமுதிா்ந்த நாற்றை நடவுசெய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

தொடா் மழையின்போது வயல்களில் தேங்கிய நீரை வடியவிட்டதால், தற்போது மழையில்லாத நிலையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடி நெற்பயிா்கள் காய்ந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. கபிஸ்தலம் பகுதியிலிருந்து அரசலாற்றில் திறக்கவேண்டிய சுமாா் 1800 கனஅடி தண்ணீா் முழுமையாக திறக்கப்படாததால், சாக்கோட்டையிலிருந்து பிரியும்போது, அரசலாறு மற்றும் நாட்டாறுகளுக்கு குறைந்த அளவே தண்ணீா் திறக்கப்படுகிறது.

அரசலாறு அகலம் அதிகமாகவும், வளைவுகள் அதிகம் உள்ளதாலும், முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரை திறந்தால் மட்டுமே, பேரளம் பகுதி விவசாயிகள் பயன்பெற முடியும். எனவே, காவிரி விவசாயப் பகுதிகளுக்கு வழங்கவேண்டிய முழுக் கொள்ளளவு தண்ணீரை குறைக்காமல், சரியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com