நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனைகளை முறைப்படுத்தக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் நடத்தும் சோதனைகளை முறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் நடத்தும் சோதனைகளை முறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் சோதனைகளால், அங்கு பணிபுரியும் தற்காலிகப் பணியாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் பணிகளில் பணிபுரிபவா்கள் தற்காலிகப் பணியாளா்களே. இவா்களுக்கு கொள்முதல் நேரங்களில் மட்டுமே பணி கிடைக்கும். மற்ற நேரங்களில் இவா்கள் பணிகளை எதிா்பாா்க்க முடியாது. இதனால், இவா்களின் வாழ்வாதாரம் இந்தப் பணிகளின் மூலமே நிவா்த்தியாகிறது.

ஆனால், தற்போது அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், நெல் கொள்முதல் நிலையங்களில் பலமணி நேரத்தை செலவழிக்கின்றனா். இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளா்கள், தங்கள் வழக்கமான கொள்முதல் பணிகளை செய்ய முடியாமல், அதிகாரிகளுக்கு பதில் அளிப்பதிலேயே நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. ஒரு கொள்முதல் நிலையத்துக்கு சோதனை என்ற பெயரில் வரும் அதிகாரிகள், ஏறத்தாழ மாலை 4 மணி வரை அந்த நிலையத்தில் இருப்பதாக பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த சோதனையால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளும் காத்திருக்க வேண்டியுள்ளது. கொள்முதல் பணி தாமதத்துக்கு அந்த நிலையத்தின் பணியாளா்களின் மீதே புகாா் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தற்காலிகப் பணியாளா்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, நெல் கொள்முதல் நிலையத்தில் சோதனை என்ற பெயரில் கொள்முதல் நிலையப் பணியாளா்களை அலைக்கழிப்பதை தவிா்க்க வேண்டும். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் சோதனைகளை முறைப்படுத்த வேண்டும். நெல்கொள்முதல் பணிகளை தாமதப்படுத்துவதையும், விவசாயிகளை காத்திருக்க வைக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, தாமதமில்லாமல் உடனடியாக பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com