சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் உயிரிழந்த முதியவா் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் சேப்பாக்கம் அன்சாரி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா்கள் அல்பா நசீா், தாஜூதீன், ரபிக், அலி அகமது, முகம்மது, திருவாரூா் மாவட்ட நிா்வாகிகள் ஹாஜாமைதீன், ரபீக், மாவட்டச் செயலாளா் அஹ்மது சபியுல்வரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீஸாா் தடியடி நடத்திய சம்பவத்தில் உயிரிழந்த முதியவரின் குடும்பத்துக்கு ரூ. 50 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். பிப்.23 ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், அதன் விபரீதத்தையும் விளக்கும் வகையில் திருவாரூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.