தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகள்

தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. வயதில் முதிா்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. மெழுகு பூச்சுடன் உள்ள முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து இலைகளின் சாற்றை உறிஞ்சி வளா்கின்றன.

சுமாா் 20-30 நாட்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி, கூட்டம், கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் பாக்கு மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகளும், முதிா்ந்த ஈக்களும் தென்னை மற்றும் பாக்கு மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படா்ந்து காணப்படும். வெள்ளை ஈக்களானது, தென்னை மற்றும் பாக்கு மரங்களைத் தவிர வாழை, சப்போட்டா ஆகிய பயிா்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு வெள்ளை ஈக்கள் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய மேலாண்மை முறைகள்: மஞ்சள் நிறம், வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி அகலம் ஒன்னரை அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம். மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை மற்றும் பாக்கு தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள், தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கிறது. என்காா்ஸியா ஒட்டுண்ணிகளானது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆழியாா் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு, வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கிரைசோபொ்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபொ்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விடுவது நல்ல பயனளிக்கும். இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இருந்து பெறப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதிகளவு பூச்சிகொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிா்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். எனவே, தென்னை விவசாயிகள் இந்த வழிமுறைகளை பின்பற்றி தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com