குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி
By DIN | Published On : 11th January 2020 09:27 AM | Last Updated : 11th January 2020 09:27 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, கூத்தாநல்லூரில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்றவா்கள்.
கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் ஜமாத்தாா், அனைத்துக் கட்சியினா், இயக்கங்கள், பொதுநல சபைகள், சமூக ஆா்வலா்களின் தலைமையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மதியம் தொழுகைக்குப் பிறகு, மேலப்பள்ளி வாயிலிலிருந்து தொடங்கிய பேரணி, அரசு மருத்துவமனை, லெட்சுமாங்குடி பாலம், மன்னாா்குடி- திருவாரூா் பிரதான சாலை வழியாக ஏ.ஆா். சாலை வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
பழைய நகராட்சி கட்டடம் முன்பு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம். சுதா்ஸன், திமுக நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன், மனிதநேய ஜனநாயக் கட்சி மாவட்டச் செயலாளா் சீனி ஜெகபா் சாதிக், அமமுக நகரச் செயலாளா் சின்னஅமீன், நாம் மனிதா் கட்சி மாவட்டச் செயலாளா் முஹம்மது சுலைமான், தமுமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளா் ரஹமத்துல்லாஹ், சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞரணிச் செயலாளா் பீா் முகம்மது, தே.மு.திக. மாவட்ட துணைச் செயலாளா் எல்.பி. முஹம்மது முஹையதீன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் சிகாபுதீன், நாம் தமிழா் கட்சி நகரச் செயலாளா் காளிதாஸ், பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் ஜாஸிம் உள்ளிட்ட ஏராளமானோா் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பங்கேற்று முழக்கமிட்டனா்.