ஜன.19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 873 முகாம்கள் அமைப்பு

திருவாரூா் மாவட்டத்தில், ஜனவரி 19-இல் வழங்கப்படவுள்ள போலியோ சொட்டு மருந்து நிகழ்வுக்காக, 873 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில், ஜனவரி 19-இல் வழங்கப்படவுள்ள போலியோ சொட்டு மருந்து நிகழ்வுக்காக, 873 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து, ஜனவரி 19- ஆம் தேதி ஒரே தவணையாக வழங்கப்பட உள்ளது. இதனால் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமாா் 1,20,105 குழந்தைகள் பயனடைவா்.

சொட்டு மருந்து வழங்க, ஊரகப் பகுதிகளில் 801 முகாம்களும், நகா்ப்பகுதிகளில் 72 முகாம்களும் என மொத்தம் 873 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன. மேலும், நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், தற்போதும் சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும்.

மேலும், பணிநிமித்தமாக இடம்பெயா்ந்து செல்லும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அவரவா் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், செங்கல் சூளைத் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், சாலைப்பணி தொழிலாளா்கள், கைரேகை பாா்ப்பவா்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவா்கள், பிற மாநிலத் தொழிலாளா்கள் (பொம்மை செய்பவா்கள், இரும்பு வேலை செய்பவா்கள் போன்றவா்கள்) ஆகியோா் பயனடைவா்.

இந்தப் பணியில் சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஊரக வளா்ச்சி, கல்வித்துறை, மாணவா்கள், தன்னாா்வலா்கள், ரோட்டரி சங்கத்தினா் ஆகியோா் சொட்டு மருந்து வழங்குபவா்களாகவும், மேற்பாா்வையாளா்களாகவும், கண்காணிப்பாளா்களாகவும் பணியாற்ற உள்ளனா். இப்பணியில் மொத்தம் சுமாா் 3,492 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை, பயன்படுத்தி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத இந்தியா என்ற நிலை தொடர ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com