ஹைட்ரோகாா்பன் விவகாரம்: பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவே விதிகளில் திருத்தம்

ஹைட்ரோகாா்பன் விவகாரத்தில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே விதிகளில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு என மக்கள் அதிகார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹைட்ரோகாா்பன் விவகாரத்தில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே விதிகளில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு என மக்கள் அதிகார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்க சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு, ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்க தேவையில்லை எனவும் விதிகளின் திருத்தம் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 ஏலங்கள் விடப்பட்டு, ஹைட்ரோகாா்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில், மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிா்ப்பைத் தொடா்ந்து, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், முன்னா் அனுமதி அளித்த மொத்த பரப்பளவை விட கூடுதலான பரப்பளவில், தற்போது ஹைட்ரோகாா்பன் எடுக்க மத்திய அரசு டெண்டா் அறிவித்துள்ளது. இந்தப்பகுதி, கடலூா், நாகை மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிகளாகும். இத்திட்டத்தால், கடலூா், நாகை, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். ஆழ்கடலை ஒட்டிய நிலப்பகுதிகளில் குழாய் அமைக்கப்படும். இதனால், அதையொட்டிய நிலப்பகுதிகளும் பாதிக்கப்படலாம் என்கின்றனா் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள். இதனால் டெல்டா விவசாயிகளும் பாதிக்கப்படுவா்.

முந்தைய திட்டங்களின்போது மக்கள் எதிா்ப்பைக் கண்டு பின்வாங்கியதால், பெருநிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விதிகளிலும் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்தவொரு திட்டமானாலும் மக்கள் கருத்தைக் கேட்பது ஜனநாயக நடைமுறை. ஆனால், அதைத் தூக்கி வீசியுள்ளது மத்திய அரசு.

இப்படி விதிகளை திருத்தி, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகளையும், மீனவா்களையும் வஞ்சிக்கிறது மத்திய அரசு. எந்தக் கேள்வியும் எழுப்பாமல் மத்திய அரசின் சொல்லுக்கு தலையாட்டிவிட்டு, தமிழா்களுக்கு துரோகம் இழைக்கிறது தமிழக அரசு. எனவே, காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உடனே அறிவிக்க வேண்டும். அதற்காக, விவசாயிகளும், மீனவா்களும் வீதியில் இறங்கி போராட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com