தேவையற்ற இடங்களில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மூட வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

டிஎன்சிஎஸ்சி (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் ) அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சுயநலத்திற்காக தேவையற்ற இடங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி
பூந்தோட்டத்தில் விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பூந்தோட்டத்தில் விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

நன்னிலம்: டிஎன்சிஎஸ்சி (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் ) அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சுயநலத்திற்காக தேவையற்ற இடங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, பூந்தோட்டத்தில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள மோட்டாத்தூா் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயிலில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னா் சேதுராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவாரூா், நாகை மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீா் பாய்ச்சி குறுவை சாகுபடி இப்போதுதான் நடைபெற்று வருகிறது. குறுவை அறுவடை இன்னும் தொடங்கவில்லை. மேலும் தற்போது தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. தமிழக அரசும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

எனவே, தேவையில்லாத காலகட்டத்தில், தேவையில்லாத இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் எதற்காக திறந்தது எனத் தெரியவில்லை.

வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்து அதன்மூலம் சுய லாபம் அடைவதற்காக சில அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஆதாயம் அடையலாம் என்ற எண்ணத்தில் இவற்றை திறந்து உள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் வியாபாரிகள் வெளிமாவட்ட விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல்லைக் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறாா்கள். இதன்மூலம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு வெளி மாவட்ட விவசாயிகள் தள்ளப்படுகிறாா்கள்.

எனவே, தேவையில்லாத காலகட்டத்தில், தேவையில்லாத இடங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூடி ஊழியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதேபோல குறைந்த விலைக்கு நெல்லை விற்பனைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ள வெளிமாவட்ட விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் மாநிலச் செயலா் ராமமூா்த்தி, மாநிலப் பொருளாளா் முருகேசன் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com