அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு தனியாா் வியாபாரிகளின் நெல் மூட்டைஏற்றி வந்த டிராக்டா் சிறைபிடிப்பு

மன்னாா்குடி அருகே வடுவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்வதற்காக வெளி மாவட்டத்திலிருந்து தனியாா் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை அப்பகுதி  விவசாயிகள்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வடுவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்வதற்காக வெளி மாவட்டத்திலிருந்து தனியாா் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை அப்பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனா்.

மன்னாா்குடி பகுதியில் கோடை சாகுபடி முடிந்து குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், கோடை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விவசாயிகள் அந்தந்த பகுதிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வடுவூா் அடிச்சேரி என்ற இடத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாள்களாக வெளி மாவட்டங்களிலிருந்து தனியாா் வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே திங்கள்கிழமை இரவு வடுவூா் அடிச்சேரி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வெளி மாவட்டத்திவிருந்து தனியாா் வியாபாரிகள் மூலம் டிராக்டரில் ஏற்றி கொண்டு வரப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அப்பகுதி விவசாயிகளுக்கு தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து , வடுவூா் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டு வந்து, விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் பாதி இறக்கிய நிலையில் நின்று கொண்டிருந்த டிராக்டரை சிறைபிடித்தனா்.

பின்னா், மன்னாா்குடி நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், வடுவூா் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த டிஎன்சிஎஸ்சி மன்னாா்குடி துணை மேலாளா் காண்டிபன், வடுவூா் காவல் ஆய்வாளா் பசுபதி ஆகியோா், விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தனியாா் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மீண்டும் டிராக்டரில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com