பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி தீா்மானம்
By DIN | Published On : 19th July 2020 07:17 PM | Last Updated : 19th July 2020 07:17 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் நகராட்சி, பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்பு அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் சனிக்கிழமை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க நகரக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் நகரத் தலைவா் ஆா். ராமாமிா்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தமிழக அரசு 5 முகக் கவசங்களை வழங்க வேண்டும், கூத்தாநல்லூா் நகராட்சி மனுக்கள் கொடுத்த அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும், கஜா புயலில் வீடுகளை இழந்த அனைவருக்கும் (பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கி) மத்திய அரசு திட்டத்தின்கீழ் உடனடியாக வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில நிா்வாகி பெ. முருகேசு, மாநில விவசாயத் தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ், விவசாய சங்க நகரச் செயலாளா் கே. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.