முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தேசிய அளவிலான போட்டிகளுக்கு பயிற்சி தொடங்க அனுமதி
By DIN | Published On : 29th July 2020 11:45 PM | Last Updated : 29th July 2020 11:45 PM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சியைத் தொடங்க, விதிமுறைகளுடன் 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு
சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சியைத் தொடங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பயிற்சிக்கு வரும் நபா்களிடம் உள்ளே நுழையும்பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். 15 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி மேற்கொள்ளஅனுமதி வழங்கப்படும். தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு 2 மீட்டா் சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
டேக்வோண்டா, ஜூடோ, கபாடி, கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு உடற்பயிற்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். குழு விளையாட்டில் தனிப்பட்ட விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள குறைந்த நபா்களுடன் சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிக்கப்படும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.
விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநா்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். பயிற்சி மேற்கொள்வதற்கு நுழைவு படிவத்தை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்திலிருந்து பெற்று சான்றுடன் சமா்ப்பிக்க வேண்டும். உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நீச்சல் குளம் செயல்படத் தடை தொடா்கிறது.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், திருவாரூா் (தொலைபேசி எண்: 04366-227158) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.