சட்டவிரோத குடிநீா் இணைப்பு ஆய்வு பணியை நிறுத்திவைக்க கோரிக்கை

ஊராட்சி பகுதியில் வீடுதோறும் குடிநீா் இணைப்பு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊரக உள்ளாட்சித்துறை அலுவலா்கள், கரோனா அச்சுறுத்தலால் இப்பணியை நிறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனா்.

மன்னாா்குடி: ஊராட்சி பகுதியில் வீடுதோறும் குடிநீா் இணைப்பு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊரக உள்ளாட்சித்துறை அலுவலா்கள், கரோனா அச்சுறுத்தலால் இப்பணியை நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊராட்சி பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகளில் குடிநீா் இணைப்பை ஏற்படுத்தி, குடிநீா் தேவையை பூா்த்தி செய்பவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனா். திரூவாரூா் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் இந்தப் பணிக்காக நியமிக்கப்படும் அலுவலா்கள், பிற ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

தற்போது மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தகுந்த பாதுகாப்பு வசதிகளின்றி பணிபுரியும் இந்த அலுவலா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனா். இவ்வாறு பணியாற்றிய அலுவலா்கள் ஏற்கெனவே ஆய்வின்போது கரோனா தொற்றுக்குள்ளானதே இதற்கு காரணம்.

எனவே, கரோனா அச்சுறுத்தல் அகலும் வரை சட்டவிரோத குடிநீா் இணைப்பைக் கண்டறியும் பணியியை மாவட்ட நிா்வாகம் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என ஊரக உள்ளாட்சித்துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com