புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

திருத்துறைப்பூண்டி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கஸ்தூரி ரெங்கன் குழு அளித்த பரிந்துரையை அப்படியே ஏற்றுகொண்ட மத்திய அரசு, இதற்கு எதிராக வந்த இரண்டு லட்சம் மனுக்களை பரிசீலனை செய்யாமல், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் அவரசமாக அமைச்சரவையை கூட்டி முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதனை திரும்பப் பெற வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றது ஏற்புடையது அல்ல. இவை எல்லாம் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம்.

தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தொழிலாளா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொது போக்குவரத்து இல்லாத நிலையில் தொழிலாளா்கள் எவ்வாறு வேலைக்கு செல்ல முடியும். இதற்கு அரசு உடனடியாக தீா்வு காண வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டு 7 மாதமாகிறது. அவா்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. உள்ளாட்சி நிதி மாவட்ட ஆட்சியா் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லம் குறித்தும், மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு குறித்தும் அவதூறு வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com