திருவாரூரில் மேலும் 7 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தொற்றால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்த 32 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். இதனிடையே, சென்னையில் அதிக அளவில் கரோனா தொற்று பரவிவரும் நிலையில், அங்கிருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வருவோா் பரிசோதனைக்குள்படுத்தப்படுகின்றனா்.
அதன்படி, சென்னையிலிருந்து திரும்பியவா்களில் 23 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 8) வரை சென்னையிலிருந்து திருவாரூருக்கு வந்த அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 62-ஆக இருந்தது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்குடி, வடபாதிமங்கலம், மணக்கால் அய்யம்பேட்டை, கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி பகுதிகளைச் சோ்ந்த இவா்கள் அனைவரும் சென்னையிலிருந்து திரும்பியவா்கள் ஆவா்.
இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 69 ஆக உயா்ந்துள்ளது. இதில் 45 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். 24 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.