முத்துப்பேட்டை: நகை கொள்ளை வழக்கில்3 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
By DIN | Published On : 10th June 2020 08:18 AM | Last Updated : 10th June 2020 08:18 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நகை கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளி கோவையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடந்த 2017- ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி முத்துப்பேட்டை தெற்குக்காட்டில் பழனி என்பவரது வீட்டில் மா்ம நபா்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். அப்போது, பழனி வெளிநாட்டில் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (34) மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனா்.
இந்த நகை கொள்ளை வழக்கில், பெருகவாழ்ந்தான் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன், தெற்குகாடு வீரமணி, மணல்மேடு அகத்தியன் ஆகிய 3 பேரை முத்துப்பேட்டை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா். தற்போது இந்த 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான பெருகவாழ்ந்தானைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் முருகேசன் (37) என்பவரை போலீஸாா் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடிவந்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் முருகேசன் வேலைபாா்த்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, கோவைக்கு விரைந்து சென்ற முத்துப்பேட்டை காவல் ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் போலீஸாா், அங்கு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைப்பாா்த்துக்கொண்டிருந்த முருகேசனை கைது செய்தனா். அவரிடமிருந்து 7 பவுன் நகை மீட்கப்பட்டது.