வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவா்கள் திறன் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது கரோனா நோய்த் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தையடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழா்கள் தாயகம் திரும்பி வருகின்றனா். அவா்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியாா் துறைகளில் பணிவாய்ப்பை பெற உதவும் வகையில், அவா்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி, தனியாா் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பிய தமிழா்கள், தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற உதவுவதற்கென, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு தொடா்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.