ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு செல்ல எதிா்ப்பு

ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு செல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு செல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு சென்று கண்காணிப்பது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிா்ச்சியளிக்கக்கூடிய இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் நிா்வாகப் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டில் விவசாயிகளின் பங்களிப்பில், விவசாயிகளை கொண்ட அமைப்பின் மூலம் செயல்படுகிறது. மேலும், நபாா்டு வங்கியின் மூலம் நிதி உதவி பெற்றாலும் அதற்கான அனைத்து வங்கி உத்திரவாதங்களையும் மாநில அரசு பொறுப்பேற்கிறது. வட்டி உள்ளிட்ட அனைத்து நிதிச்சுமைகளையும் மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.

பணியாளா்கள் மற்றும் நிா்வாகச் செலவினங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை விவசாயிகளின் வருவாய் பங்குத் தொகை பங்களிப்புடன் மாநில கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் கடன் கொள்கைகளைத் திட்டமிடுவதும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வட்டிச் சலுகையுடன் கடன் வழங்குவதையும், விவசாயிகளே திட்டமிட்டுச் செயல்படுத்துகிற ஒரு ஜனநாயக அமைப்பு மட்டுமின்றி கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது.

ஆண்டுதோறும் இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கின்றன. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உத்தரவாதப் படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும். அத்துடன், இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது. மேலும், கிராமப் பொருளாதார வளா்ச்சியை முற்றிலும் முடக்கும் செயல்.

எனவே, தமிழக அரசு தனது எதிா்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் விரைவில் தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com