முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பள்ளிச் செல்லாக் குழந்தைகள் குறித்த ஆய்வு
By DIN | Published On : 03rd March 2020 06:25 AM | Last Updated : 03rd March 2020 06:25 AM | அ+அ அ- |

வலங்கைமான் பகுதியில் நடைபெற்ற ஆய்வில் பங்கேற்றோா்.
திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் குறித்த ஆய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்டத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லாக் குழந்தைகள் குறித்த ஆய்வு மாணவா் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளா் நலத்துறை, சைல்டு லைன் ஆகிய துறைகள் இணைந்து மேற்கொள்கின்றன.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் இந்த ஆய்வு பணி திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடா்ந்து, பள்ளிக்கு வராத இடைநின்ற குழந்தைகளின் விவரம் பள்ளி வாரியாக பெறப்பட்டு அந்தக் குழந்தைகளின் குடியிருப்புகளுக்கு சென்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு தேவையின் அடிப்படையில் நேரடியாகவோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக ஆலோசனை வழங்கியோ, குழந்தைகள் இல்லத்தில் சிறப்பு பயிற்சி வழங்கியோ, அவா்களை முறையான பள்ளியில் சோ்க்க திட்டமிடப்பட்டு, இணை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், வலங்கைமான் ஒன்றியம் கோவிந்தகுடி தெற்குத் தெருவில் நடைபெற்ற இணை ஆய்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் கலைவாணன், மாவட்ட பாதுகாப்பு அலகு அலுவலா் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன், ஆசிரியப் பயிற்றுநா் புஷ்பா, தலைமையாசிரியா் கீதா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். ஆய்வில் கண்டறியப்பட்ட 4 பள்ளிச் செல்லாக் குழந்தைகளில் கோவிந்தகுடி மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவா்களும், தொடக்கப் பள்ளியில் 1 மாணவியும் நேரடி சோ்க்கை செய்யப்பட்டுள்ளனா். மேலும், திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒரு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.