அரசு மருத்துவக் கல்லூரி சாலையை இருவழிச் சாலையாக மாற்றக் கோரிக்கை
By DIN | Published On : 04th March 2020 01:49 AM | Last Updated : 04th March 2020 01:49 AM | அ+அ அ- |

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
திருவாரூா் மாவட்டத்துக்குரிய முக்கிய அரசு அலுவலகங்கள் விளமல் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரக வளாகத்தையொட்டி அமைந்துள்ளன. அதாவது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம், போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகம், தாலுகா காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம் உள்ளிட்டவை ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களுக்குச் செல்ல, திருவாரூா் - தஞ்சை செல்லும் வழியில் தெற்குப்புறமாக செல்லும் சாலையாகும். இது ஒரு வழிச்சாலையாகவே, நீண்ட நாள்களாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், அகலப்படுத்தப்படாமல் குறுகலான நிலையிலேயே காணப்படுகிறது.
மேடு, பள்ளங்களாக உள்ள இந்த சாலையில், நகரப் பேருந்துகள், ஆட்டோ, காா், போலீஸ் வாகனங்கள் சென்று வருகின்றன. அவசர சிகிச்சைக்கு வேகமாக செல்ல வேண்டிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. 4 சக்கர வாகனங்கள் வந்தால், எதிரே வரும் வாகனமோ அல்லது நடந்துவரும் பாதசாரி கூட, சாலையை விட்டு இறங்கி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த சாலை வழியாகத்தான், மாவட்டக் காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், பிற துறை உயா் அலுவலா்களும் பயணிக்கின்றனா். எனவே, அவசர நடவடிக்கை எடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையை இருவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதோடு, தேவையான அளவு உயா் மின்விளக்குகளும் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.