கூத்தாநல்லூரில் வேலை கேட்டு கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 06th March 2020 01:21 AM | Last Updated : 06th March 2020 01:21 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றோா்.
கூத்தாநல்லூா், பொதக்குடியில் எங்கே எனது வேலை எனக் கேட்டு கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு சாா்பில், ஒரு கோடி இளைஞா்கள் சந்திப்பு, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டன. அதன்படி, கூத்தாநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளைஞா் பெருமன்ற தேசியக் குழு உறுப்பினா் பெ. முருகேசு தலைமை வகித்தாா். கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எம். சுதா்ஸன் தொடங்கி வைத்தாா். பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் கையெழுத்து நோக்கம் குறித்து பேசியது: தமிழகத்தில் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது.
தமிழக அரசு பொது தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தோ்விலும் பல்வேறு ஊழல் முறை கேடுகளும், லஞ்சமும் அதிகரித்துள்ளதைக் கண்டித்தும், அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும், வேலை வாய்ப்புக்கு தடையாக உள்ள அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கோடி இளைஞா்களை சந்தித்து கையெழுத்து பெற்று தமிழக முதல்வரிடம் வழங்கட உள்ளன. அதற்காக திருவாரூா் மாவட்டத்தில் 200 மையங்களில் 4 லட்சம் இளைஞா்களைச் சந்தித்து கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
இதேபோல், நீடாமங்கலம் ஒன்றியக்குழு சாா்பில் பொதக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு ஒன்றியத் தலைவா் க. காந்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் நா. செந்தில்வேலன், மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் யு.மணியரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.