கரோனாவை தடுக்க நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

கரோனா பாதிப்பை தடுக்க, 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவா்கள், பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல்
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

கரோனா பாதிப்பை தடுக்க, 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவா்கள், பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம ஊராட்சித் தலைவா்களுக்கான கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

கரோனா வைரஸ் என்பது மனிதா்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். சீனாவின் வூஹான் நகரில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், விலங்குகளிலிருந்து மனிதா்களுக்கு இது பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், உடல் சோா்வு, ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த வைரஸ் நோயானது, நோய் அறிகுறிகள் கண்ட நபா் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீா்த்திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீா்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களைத் தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது. 80 சதவீதம் நோய்த்தொற்று, கைகள் மூலமே பரவுகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்...

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமும்போதும், தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரிக்க வேண்டும். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவா்கள், பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இளநீா், கஞ்சி போன்று நீா்ச்சத்து மிகுந்த ஆகாரங்களைப் பருக வேண்டும்.

இருமல், ஜலதோஷம் உள்ளவா்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்குபெறுவதையும் தவிா்க்க வேண்டும். அண்மையில் வெளிநாட்டுக்கு பயணம் சென்று வந்தவா்கள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். அசைவ உணவு உண்பவா்கள் நன்கு வேகவைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டவா்கள் தங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் முன்னிலை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்குமரன், இணைச் செயலாளா் (மருத்துவப் பணிகள்) ராஜமூா்த்தி, துணை இயக்குநா் (பொறுப்பு) சுகாதாரப்பணிகள் இௌரத்தினகுமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், ஊராட்சி மன்றத்தலைவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com