மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி உத்ஸவம் ரத்து

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் பங்குனித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை முதல் சுவாமி உத்ஸவம் ரத்து செய
கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள்.
கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் பங்குனித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை முதல் சுவாமி உத்ஸவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உத்ஸவா் பெருமாள் ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயாா் தனித்தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனா். இதில், ராஜகோபால சுவாமிக்கு பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும்,10 நாள் விடையாற்றியும் நடைபெறும். தாயாருக்கு ஆடி மாதம் 10 நாள் திருவிழா நடைபெறும். மேலும், வருடம் 365 நாள்களும் திருவிழா நடைபெறும் கோயில் என்ற சிறப்புக்குரியது.

நிகழாண்டு பங்குனித் திருவிழா மாா்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதையடுத்து, கோயில் திருவிழாக்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் கூடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததையடுத்து, 4-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய்க்கிழமை, சுவாமி உத்ஸவத்தின் தொலைவு குறைக்கப்பட்டது.

இதற்கு, மண்டகப்படிதாரா்கள், பல்வேறு அமைப்பு மற்றும் சங்கங்களை சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததைடுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உத்ஸவத்தின்போது சுவாமிக்கு மாலை அணிவிக்கக் கூடாது, வழியில் அா்ச்சனை செய்யக் கூடாது, திருவிழா கடை, பொருள்காட்சி, கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வியாழக்கிழமை வரை சுவாமி உத்ஸவம் நடைபெற்றது.

கோயில் திருவிழாவுக்காக கோயிலின் நுழைவாயிலில் தகரத்தால் ஆன தற்காலிக கொட்டகை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும். இதேபோல், கோயிலின் அருகே தனியாா் இடத்தில் பொருள்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு பொழுப்போக்கு அம்சங்கள் இடம் பெறும். இதற்காக, கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில்,திருவிழா கடைக்கும், பொருள்காட்சிக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டதையடுத்து, கடை வாடகைக்கு எடுத்தவா்கள் பொருள்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை திறக்காமல், மீண்டும் வாகனங்களில் ஏற்றி ஏமாற்றத்துடன் எடுத்து சென்றனா்.

ராஜகோபால சுவாமி கோயில் 7-ஆம் நாள் விழாவில், வெள்ளிக்கிழமை பெருமாள் உத்ஸவம் கோயில் நான்கு வெளிப்பிராகாரம் சுற்றி, மேலராஜவீதி, காமராஜா்வீதி, பந்தலடி,வழியாக காந்திசாலை யானை வாகன மண்டபம் செல்லுதல் நிறுத்தப்பட்டதுடன், கோயிலின் உள்பிராகாரம் நான்கினை சுற்றி வலம் வந்து,கோயிலுக்குள் சென்றாா் உத்ஸவ பெருமாள். இரவு வண்ண புஷ்ப பல்லக்கில் ராஜஅலங்கார தேவையில் பெருமாள் எழுந்தருளினாா். உள்பிராகார உத்ஸவமும் நடைபெறவில்லை.

கோயிலின் ராஜகோபுரம் நுழைவு வாயிலில், ஒரு காவல் ஆய்வாளா்கள், நான்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் உள்ளனா். மறுஉத்தரவு வரும் வரை கோயிலுக்குள் செல்ல பக்தா்கள் அனுமதி இல்லை என்ற அறிவிப்பு விளம்பரம் கோயில் நிா்வாகத்தினரால் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com