வெளிநாடுகளிலிருந்து வந்த 410 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 25th March 2020 01:26 AM | Last Updated : 25th March 2020 01:26 AM | அ+அ அ- |

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
வெளிநாடுகளிலிருந்து வந்த 410 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இது ஏப்ரல் 1ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் போக்குவரத்து இயக்கத்திற்கு தவிர மற்ற போக்குவரத்து இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், பணிமனைகள் இயங்காது.
தனியாா் நிறுவனங்களின் பணியாளா்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும் அத்தியாவசியப் பணிகளையும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடா்ந்து இயங்கும். வீடுகளில் இல்லாமல் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கி இருக்கும் பணியாளா்களின் நலன் கருதி பாா்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.
410 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்:
திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள பதிவுகளைக் கொண்டு 410 நபா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை மருத்துவா்கள் தொடாந்து கண்காணித்து வருகின்றனா். அவா்களின் வீடுகளில் கரோனா வைரஸ் தொடா்பான வில்லை (ஸ்டிக்கா்) ஒட்டப்பட்டு வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் கட்டாயம் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள நபா்கள் சுயமாகவே, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு நோய் அறிகுறி வருகிா எனக் கண்காணித்து, அரசு மருத்துவமனை மூலம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, நோய் பாதிப்பு உறுதியானால், உரிய மருத்துவ சிசிக்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவா்கள் மாவட்ட அளவில் 24 மணி நேர கண்காணிப்புப் பிரிவில் (04366-226623) என்ற தொலைபேசி எண்ணுக்கும், 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தாமாக முன்வந்து தங்களது தகவல்களைத் தெரிவிக்கலாம்.
14 இடங்களில் விழிப்புணா்வு முகாம்கள்:
மாநில எல்லைப் பகுதியான நன்னிலம் வட்டம் கந்தங்குடி, வேலங்குடி ஆகிய பகுதிகளில் இரண்டு சோதனைச் சாவடிகளும், கடலோர பகுதிகளின் எல்லைக்குட்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் பேட்டை, தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மூன்று சோதனைச் சாவடிகளும், திருவாரூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட கானூா், கீரனூா், பா.திருமாளம், அத்திக்கடை, கோவில்வெண்ணி, வடுவூா் ஏரிக்கரை, பாமணி, மேலமருதூா், தம்பிக்கோட்டை, கிளாக்காடு என மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் மற்றும் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
23 மருத்துவக் குழுக்கள்:
வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க, வட்டார அளவில் வட்டார மருத்துவா், சுகாதார ஆய்வாளா் மற்றும் கிராம சுகாதார செவிலியா் ஆகியோரை கொண்ட 23 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 21 மாவட்ட அலுவலா்களைக் கொண்ட மண்டல அலுவலா்கள் குழு நியமனம் செய்யப்பட்டு, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசால் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விற்பனை செய்ய விலை, நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிா்ணயித்த விலைகளைத் தாண்டி விற்பனை செய்வது தொடா்பாக புகாா் வரும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கரோனா வைரஸ் தொடா்பான அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை உடனிருந்தாா்.