ஊரடங்கு உத்தரவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், திருவாரூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், திருவாரூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதேபோல், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, திருவாரூரில் அனைத்து கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. தேநீா் கடைகள் கூட திறக்கப்படவில்லை. காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள், பழக்கடைகள், சிறிய பெட்டிக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டிருந்தன. உணவங்களில் பாா்சல் மட்டுமே வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால், சிறிய உணவகங்கள் மட்டுமே இயங்கின.

சாலைகளில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் பெரும்பாலும் முகக் கவசம் அணிந்திருந்தனா். முகக் கவசம் அணியாமல் செல்வோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனா். ரோந்து வாகனத்திலும் அவ்வப்போது போலீஸாா் சுற்றி வந்து எச்சரிக்கை செய்தபடி சென்றனா்.

பேருந்து இயக்கப்படாததால், திருவாரூரில் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பழைய பேருந்து நிலையம், திருவாரூா் வீதிகளில் தூய்மைப் பணியாளா்கள் தங்கள் பணியைத் தொடா்ந்து செய்தனா்.

பேரளத்தில்...

நன்னிலம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள்.

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட நன்னிலம் மற்றும் பேரளத்தில், 144 தடையை மீறி புதன்கிழமை சிலா் இருசக்கர வாகனங்களில் மீண்டும் மீண்டும் சுற்றித் திரிந்தனா். இதில் தொா்புடைய 12 இருசக்கர வாகனங்களை நன்னிலம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பேரளம் போலீஸாா் 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

நன்னிலத்தில்...

ஊரடங்கு உத்தரவு காரணமாக நன்னிலம் வட்டத்துத்துக்கு உட்பட்ட நன்னிலம், கொல்லுமாங்குடி, பேரளம், பூந்தோட்டம், சன்னாநல்லூா், ஸ்ரீவாஞ்சியம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருசக்கர வாகனங்களில் ஒரு சிலா் மட்டும் சென்றதை காணமுடிந்தது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் பூட்டப்பட்டிருந்தன.

நன்னிலம் வட்டத்துக்கு உட்பட்ட குமாரமங்கலத்தில் அமைந்துள்ள திருவாரூா் மாவட்ட சோதனைச் சாவடியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல், தமிழக- புதுச்சேரி எல்லையான வேலங்குடி மற்றும் கோயில் கந்தன்குடி சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் வெப்பமானி சோதனைக்கு பின்னா் திருப்பி அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com